"விஜய் இனியும் தாமதிக்க கூடாது.. களத்துல இறங்கனும்.. இல்லன்னா" - தயாரிப்பாளர் அதிரடி!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்தும் அவரது அரசியல் என்ட்ரி குறித்தும் தயாரிப்பாளர் ராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த வேளையில், பிகில் திரைப்படத்தில் வரி எய்ப்பு நடந்திருப்பதாக கூறி, வருமான வரித்துறையினர் விஜய்க்கு சம்மன் கொடுத்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து நடைப்பெற்ற சோதனையில், ஃபைனான்சியர் வீட்டில் 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விஜய்யிடம் அவரது சொத்துக்கள் பற்றியும் சம்பள விஷயம் பற்றி விசாரிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரான ராஜன் அவர்கள், இது குறித்து தனது கருத்தை பிஹைன்ட்வுட்ஸ் சேனலுக்கு தெரிவித்தார். அவர் கூறியதாவது, 'வரி எய்ப்பு விவகாரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது இயல்பானது தான், ஆனால் அதற்காக, ஷூட்டிங் நடைப்பெற்று கொண்டிருக்கையில், அதை தடுத்து சம்மன் அளித்து, விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்தது தவறு. அதுவும் விஜய் தனது சொந்த காரில் வருகிறேன் என சொல்லியதையும் பொருட்படுத்தாமல் அவரை அழைத்து வந்தது விஜய்க்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுத்திருக்கும். சம்பள விஷயத்தை பொறுத்த வரையில், விஜய் மிகவும் நேர்மையானவர், டி.டி.எஸ் எனும் வரித்தொகையை எடுத்து கொண்டு தான் அவர் சம்பளத்தை தர சொல்வார் மேலும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருக்கு தான் நஷ்டம்.
விஜய் மீது இப்படியான தாக்குதல் பாய்வதற்கான காரணம், அவர் வெளிப்படையாக அரசியல் பேசுகிறார். பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி உள்ளிட்ட விஷயங்களை ஆடியோ லான்ச்சில் தைரியமாக பேசுவதால் தான் அவரை இப்படி செய்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, விஜய் இனியும் தாமதிக்காமல் உடனே களத்தில் இறங்க வேண்டும், இல்லை என்றால் இது போன்று தான் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். அவர் தைரியமாக இப்போது இறங்க வேண்டும். மக்கள் செல்வாக்கு இருக்கிறது, அது ஒன்று போதும்' என அவர் கூறியுள்ளார்.