ரஜினியின் அரசியல் குறித்த சர்ச்சை வசனம் - கோமாளி இயக்குநரின் பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 05, 2019 12:06 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகை பற்றி ‘கோமாளி’ படத்தின் டிரைலரில் இடம்பெற்ற காட்சி சர்ச்சைக்கு உள்ளாகியது. இது பற்றி அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆக.15ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியானது.
அந்த டிரைலரில், சுமார் 16 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஜெயம் ரவிக்கு அதனை நம்ப முடியாததால், யோகிபாபு சில வீடியோக்களை போட்டுக் காட்டுகிறார். அதில், “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவை யோகி பாபு போட்டுக்காட்டியதும், ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 1996. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பது போன்ற வசனம் இடம்பெற்றிருந்தது.
ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த சர்ச்சை வசனத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து #BycottComali என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கினர். இது தொடர்பாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ரஜினி ரசிகர்களின் மனம் புண்பட்டதற்கு வருத்தம் தெரிவிப்பதாக நம்மிடையே பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "திரைப்படத்தின் கதை படி, ஜெயம் ரவியின் மனநிலை 1996-ல் இருப்பதை காட்சிப்படுத்தவே இதனை சேர்த்தோம். ரஜினி சாரின் அரசியல் வருகையை விமர்சிக்கும் நோக்கில் இதை செய்யவில்லை. படத்தில் இது போன்ற கேளியான பல வசனங்களும், காட்சிகளும் உள்ளன. நானும் ரஜினி சாரின் தீவிர ரசிகன் தான். அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். எப்போதும் அவருக்கு ஆதரவு உண்டு" என்றார்.
மேலும், #BycottComali ஹேஷ்டேக் குறித்து பதிலளித்த அவர், "ரஜினி சார் மீதுள்ள பாசத்தின் வெளிபாடாக இதனை கருதுகிறேன். ரஜினி ரசிகர்களின் மனதை காயப்படுத்தியது கஷ்டமாக உள்ளது" என்றும் கூறினார்.