“இந்தியன்ல அப்பா மாதிரி.. இந்தியன் 2-ல இவர மாதிரி” - கமலுக்கு போடப்பட்ட குறும்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு போட்டியாளர்கள் அனைவரும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர்.

Bigg Boss Tamil 3 Kamal's Indian 2 look alike Charu Haasan

இந்நிலையில்,  இந்த வாரம் வனிதா வெளியேற்றப்பட்டார். நேற்றைய எபிசோடில் வனிதாவின் எலிமினேஷனுக்கு முன்பாக போட்டியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் அவர்களை வாழ்த்தும் வீடியோக்களை பார்த்து போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டனர். இதனை தொடர்ந்து பிக் பாஸ் சர்ப்ரைஸாக கமல்ஹாசனுக்கும் ஒரு வீடியோ இருப்பதாக கூறி அதனை ஒளிபரப்பினார்.

அந்த வீடியோவில், கமல்ஹாசனின் மூத்த சகோதரரும், நடிகரும், இயக்குநருமான சாருஹாசன் கமலின் சிறு வயது நினைவுகளை நினைவு கூர்ந்தார். அவர் பேசுகையில், ‘எனக்கு திருமணமான போது கமல்ஹாசன் பிறந்தார். அதிக வயது வித்தியாசம் என்பதால் எனக்கு மகன் போல் தான் கமல். சிறு வயதிலேயே படம் பார்க்கும் பழக்கம் உள்ளவர் கமல். எம்.ஜி.ஆர் நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படத்தை 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் பார்த்து மிட்டாய் பரிசு வாங்கியுள்ளார்’.

மேலும், ‘கமலின் படிப்பை அப்பா பாதியிலேயே நிறுத்திவிட்டார். நாங்கள் கமல்ஹாசன் கலெக்டராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், கமலுக்கு சினிமா தான் என அப்போவே அப்பா முடிவு செய்திருந்தார். அது இப்போது சரியாகிவிட்டது. கலெக்டராகியிருந்தால் கமல் யாரென்று தெரிந்திருக்காது. இப்போது இந்தியா முழுவதும் அவரை பற்றி அனைவருக்கும் தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சி சிறந்த நிகழ்ச்சி இதில் கமல்ஹாசன் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்று கூறினார்.

இதற்கு உணர்ச்சிவசப்பட்டும் படாமலும், பதில் கூறிய கமல், ‘எனக்கு திகட்டாமல் கல்வியை பயிற்றுவித்ததில் எனது குடும்பத்திற்கு பெரும் பங்கு உண்டு. சகோதரனாக என்னை பாவித்தது கிடையாது, சாருஹாசனும், சந்திரஹாசனும் எனக்கு அப்பா உருவில் கிடைத்த அண்ணன்கள், எனது நண்பர்கள். அப்பாவுக்கு தாத்தா வயது இருந்தாலும் அவரும் எனக்கு நெருங்கிய நண்பர்’.

‘இந்தியன் படத்தின் கெட்டப்பில் பார்க்கும் போது நான் அப்பா மாதிரி தோற்றமளிப்பதாக உணர்ந்தேன். இப்போது இந்தியன் 2-வில் அண்ணன் சாருஹாசனை போல் தெரிவதாக உணர்கிறேன். சாயல் இருக்கிறது’ என்றார்.