''எந்த ஷாவோ சுல்தானோ மாத்த முடியாது'' - ஹிந்தி விவகாரம் குறித்து கமல் கடும் கண்டனம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 16, 2019 01:35 PM
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தை யொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில், ''இந்தியாவில் பல மொழிகள் இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.
![Kamal Haasan Condemned to Amit Shah about Hindi Kamal Haasan Condemned to Amit Shah about Hindi](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/kamal-haasan-condemned-to-amit-shah-about-hindi-photos-pictures-stills.jpg)
ஆனால் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் இந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த முடியும். இந்திய மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த கருத்து நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாடலாசிரியர் வைரமுத்து போன்றோர் அதனை கடுமையாக எதிர்த்தனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''பல ராஜாக்கள் தங்களது ராஜ்ஜியங்களை விட்டுக்கொடுத்தது தான் இந்தியா. ஆனால் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று பல மாநிலங்கள் சொன்னது எங்கள் மொழியும் கலாச்சாரமும் தான். கடந்த 1950ல் இந்தியா குடியரசு ஆன போது அரசு இதே சத்தியத்தை மக்களுக்கு செய்தது.
அந்த சத்தியத்தை எந்த ஷாவோ சுல்தானோ சாம்ரோட்டோ மாற்றிவிட முயற்சிக்கக்கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது சிறிய போராட்டம் சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கனால் அது பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது.
பெரும்பாலான இந்தியர்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதனை நாங்கள் சந்தோஷமாக பாடிக்கொண்டிருக்கிறோம். பாடிக்கொண்டிருப்போம். அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்துக்கும் தேவையான இடைத்தையும் மதிப்பையும் கொடுத்திருந்தார். இந்தியா என்பது அற்புத உணவு. அதனைக் கூடி உண்போம். அதனை தினிக்க நினைத்தால் குமட்டி விடும். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காணமுடியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
புதிய திட்டங்களோ
சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக. pic.twitter.com/xH6c0ANvQh
— Kamal Haasan (@ikamalhaasan) September 16, 2019