'அந்த பொண்ணு மேல தப்புனு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்' - சுபஸ்ரீ விவகாரம் குறித்து கமல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 16, 2019 10:50 AM
சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற கல்லூரி மாணவி பேனர் விழுந்ததன் காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னே வந்த லாரி மோதி அவர் பலியானார். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகராத்தில் பேனரால் தான் சுபஸ்ரீ இறந்ததாக கூறி பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் 'பிகில்' இசை வெளியிட்டு விழா வருகிற 19 நடைபெறுவதால் அதனை முன்னிட்டு தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் ரசிகர்களை கேட்டுக்கொண்டார். நடிகர் சூர்யா, சிம்பு உள்ளிட்டோரும் தங்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என ரசிகர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் '20 வருடங்களுக்கு முன்பே தனக்கு பேனர் வைக்கக்கூடாது' என ரசிகர்களை கேட்டுக்கொண்டதாக தெரவித்திருந்தார். இந்நிலையில் இறந்த சுபஸ்ரீயின் குடும்பத்தாரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சுபஸ்ரீயின் பெற்றோர்களுக்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றமுடியும்னு தெரியல. அவர்களது சோகம் கோபமாக மாற எதுவும் சொல்ல வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
நடந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் இந்த பெண் மீது தவறு என்று சொல்லியிருக்கக்கூடாது. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும். ஒழியவில்லை என்றால் மக்கள் ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும். கட்சிக்காரங்களுக்கு மட்டும் இல்லை. சினிமா ரசிகர்களுக்கும் இது வேண்டுகோளாக அல்ல கட்டளையாக சொல்கிறேன். இதனை அவர்கள் அன்பு கட்டளையாக எடுத்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று மக்கள் அந்த நாளுக்காக காத்திருக்கமாட்டார்கள். எல்லா குற்றங்களிலும் இருந்து தப்பித்து விடலாம் என்ற எண்ணம் கட்சிக்காரர்களுக்கு இருக்கிறது. அது தகர்க்கப்பட வேண்டும்''என்கிறார்.
'அந்த பொண்ணு மேல தப்புனு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்' - சுபஸ்ரீ விவகாரம் குறித்து கமல் வீடியோ