'வீட்டுக்கு போகாமல் ATM வாசலே கதியென கிடக்கும் மக்கள்'... 'கோதுமை மாவின் விலையை கேட்டால்'... ஆப்கானின் தற்போதைய நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்வங்கிகளில் பணம் இருந்தும் அதை எடுக்க முடியாத சூழ்நிலைக்கு ஆப்கான் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. வங்கியில் பணமிருந்தும் அதை எடுக்க முடியாத நிலைக்கு ஆப்கான் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படாததால் மக்கள் என்ன செய்வது எனப் புரியாமல் தவித்து வருகிறார்கள்.
பாதுகாப்பற்ற நகராக காபூல் மாறி வருவதால், அங்குள்ள வங்கிகள் மூடப்பட்டுள்ளன. ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படாமல் செயலிழந்துள்ளன என்று 'தி வாஷிங்டன் போஸ்ட்' நாளேடு தெரிவித்துள்ளது. இதனிடையே காபூலில் உள்ள வங்கிகள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும் என்று தாலிபான்கள் தரப்பில் புதன்கிழமை உத்தரவிடப்பட்டும் வங்கிகள் திறக்கப்படவில்லை.
வங்கிகள் எப்படியாவது திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்கள் நீண்ட வரிசையில் நாள்தோறும் காத்திருக்கிறார்கள். சிலர் வீட்டிற்குக் கூட செல்லாமல் ஏடிஎம்யை எப்படியாவது திறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அதன் வாசலிலேயே காத்துக் கிடக்கிறார்கள். பணம் எடுத்துக் கொண்டு சென்றால் தான் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும் என்ற காரணத்தினால் மக்கள் ஏடிஎம் மையங்களிலேயே காத்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹல்லாஹ் முஜாஹித் கூறுகையில், “ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது டாலர்கள் எதையும் எடுத்துச் செல்லக் கூடாது. அவ்வாறு கொண்டுசென்றால் அது பறிமுதல் செய்யப்படும்'' எனக் கூறியுள்ளார். இதற்கிடையே அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்குச் சென்றுள்ளது.
அரிசி மாவு, கோதுமை மாவு போன்ற பொருட்களை மக்கள் வாங்கவே முடியாது என்ற நிலைக்கு அதன் விலை உயர்ந்துள்ளது. இதனிடையே காபூல் நகரப் பொருளாதார வல்லுநர் முகமது தாவூத் நியாஸ் கூறுகையில், ''ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் எவ்வாறு நிர்வாகம் செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் எதிர்காலம் அமையும். நிச்சயமற்ற சூழல் பொருளாதாரத்தைச் சரிவுக்குக் கொண்டுசெல்லும். இதனால் மக்கள் மேலும் வறுமைக்குத் தான் செல்வார்கள்'' என எச்சரித்துள்ளார்.