'தப்பிக்கிறதுக்கு வழியே இல்லயா'?!.. இழுத்து பூட்டப்பட்ட காபூல் விமான நிலையம்!.. நிற்கதியாய் நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் முண்டியடித்துக் கொள்வதால் நிலைமை கையை மீறி சென்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தாலிபான் அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காபூல் விமான நிலையத்தில் எந்த நாட்டு விமானமும் தரையிறங்குவதற்கான வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததை அடுத்து இந்தியா உட்பட மற்ற நாடுகள் அந்தந்த நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்கு அழைத்துவர விமானங்களை அனுப்பி வருகிறது. இதனால் காபூல் விமான நிலையத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடிவருகின்றனர்.
இதற்கிடையே, தாலிபான் அமைப்பு விமான நிலையத்திற்கு செல்லும் மக்கள்மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனால் காபூல் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்க முடியாத சூழல் நிலவிவருகிறது. காபூல் வான்வெளிகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.
நேற்று (15.8.2021) 129 பேர் இந்தியா அழைத்து வரப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு விமானம் காபூல் செல்ல இருந்தது. ஆனால், காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் பிற்பகல் 12.30க்கு டெல்லியில் இருந்து புறப்படவிருந்த விமானத்தை இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. காபூல் விமான நிலையத்தில் ஆப்கான் மக்கள் உட்பட பலர் ஒரே நேரத்தில் வெளிநாடு செல்ல குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.