'பணம் எடுக்காமலேயே வந்த எஸ்.எம்.எஸ்கள்'... 'ரூ 5 கோடிக்கும் மேல்'... 'சினிமா பாணியில் ஹேக்கர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ஊர்மக்கள்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூரில் ஹேக்கர்களால் வங்கி வாடிக்கையாளர்கள் பலரது கணக்கிலிருந்தும் ரூ 5 கோடிக்கும் மேல் பணம் எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சிலருக்கு அவர்கள் பணம் எடுக்காமலேயே பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளது. அதில் சில வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ 10 ஆயிரம் வீதம் அடுத்தடுத்து ரூ 50 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் மட்டும் 100க்கும் அதிகமானவர்கள் கணக்கிலிருந்து இதுபோல பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வங்கிக்கு சென்று கேட்ட பிறகு, எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து மட்டும் 3 கோடி ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து விசாரணையில் வாடிக்கையாளர்களின் கணக்குகளை ஹேக் செய்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்குகளை சென்னையில் உள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றியுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சினிமா பாணியில் நிகழ்ந்துள்ள இந்த மோசடி தஞ்சாவூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.