'வெளியில் இருந்து பார்த்தால் வெளிப்படையாக தெரியும்'... 'ஆனா தைரியமா போலாம்'... 'அப்படி என்ன மேஜிக்'?... அசத்தும் கண்ணாடி டாய்லெட்!
முகப்பு > செய்திகள் > உலகம்கழிவறை முழுவதும் கண்ணாடி, உள்ளே இருப்பது எல்லாம் வெளிப்படையாக வெளியில் தெரியும். அய்யயோ இதுல எப்படி? அப்படின்னு யோசிக்கிறீர்களா. ஒன்றும் பதற்றம் வேண்டாம். அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ள கண்ணாடி கழிவறை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஜப்பானியர்களின் சிந்தனை என்பது எப்போதுமே மற்ற நாட்டு மக்களைத் திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்கும். அவர்கள் கடின உழைப்பிற்கு பெயர் பெற்றவர்கள் என்பது உலகமே அறிந்த ஒரு விஷயம். அந்த வகையில் பொது கழிப்பறைகள் குறித்த மக்களின் கருத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, புதுமையான கழிப்பறைகளை அறிமுகம் செய்து அசத்தியுள்ளார்கள். தலைநகர் டோக்கியோவின் வணிகப் பகுதியான ஷிபூயாவில் உள்ள இரண்டு பூங்காக்களில் கண்ணாடிச் சுவர்களால் ஆன, அழகான விளக்கு போல ஒளிரும் வெளிப்படையான பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன.
வெளியிலிருந்து பார்த்தால் கழிப்பறை வெளிப்படையாகத் தெரியும். ஆனால் உள்ளே யாராவது செல்லும் போது அது ஒளிபுகாதவாறு மாறும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கண்ணாடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா என்பதை மக்கள் வெளியிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். டோக்கியோ டாய்லெட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை உருவாக்கப் பல முன்னணி வடிவமைப்பாளர்கள் உதவி உள்ளனர்.
பொது கழிப்பறைகள் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் பிரதான மனநிலை என்பது அதன் சுத்தம் குறித்த சந்தேகமே. ஆனால் இனி அந்த கவலை என்பது நிச்சயம் இருக்காது என அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். உள்ளே யாராவது இருக்கிறார்களா என்பதையும் அறிந்து கொள்ள முடிவதால் இது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. நவீன தொழில் நுட்பம் மூலம் இந்த கழிவறை உருவாக்கப்பட்டுள்ளதால், உள்ளே செல்லும் நபர் வெளிப்புற கண்ணாடி பூட்டப்படும்போது அது ஒளிபுகாதவாறு மாறும்.
இதற்கிடையே இந்த கழிவறைகள் இரவில் ஒரு அழகான விளக்கு போலப் பூங்காவை ஒளிரூட்டுகிறது. இதன் சிறப்பு அம்சங்களைத் தெரிந்து கொண்ட மக்கள், பொது கழிப்பறை குறித்த தங்களது எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள் இந்த திட்டத்தின் கண்காணிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.