'இறந்து போய்ட்டான்னு வந்து சொன்னாங்க...' 'இப்படி பண்ணாத'ன்னு தலையா அடிச்சுக்கிட்டோமே... - 3-வது மாடில விழுந்த சிறுவன்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் 6 வயது சிறுவன் 3-வது மாடியிலிருந்து விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தை சேர்ந்த பிரேம் என்பவர் அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பிரேமின் 6 வயது மகன் 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
மேலும் கீழே விழுந்து மயங்கிய சிறுவனின் வலது கையில் காயம் ஏற்பட்டு முறிவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஆஷிஷ் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அண்ணா நகர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேபாளத்தை சேர்ந்த பிரேம் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆறாவது அவென்யூ, இசட் பிளாக்கில் உள்ள கட்டிடத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு அக்குடியிருப்பின் மூன்றாவது மாடியில் ஒரு அறை வழங்கப்பட்டது, அங்கு அவர் தனது மனைவி யஷிகா மற்றும் அவர்களது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். மேலும் முதல் இரண்டு தளங்களில் கேக் கடையும் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரேம் அவர்களின் மகன் ஆஷிஷ் எப்போதும் வீட்டு பால்கனி இருக்கும் பக்கத்தில் விளையாடுவதையும், அங்கு உள்ள குழாயில் தொங்குவதை பழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பே பல முறை ஆஷிஷை பெற்றோர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் கடந்த ஞாயிறு அன்றும் அவ்வாறு விளையாடும் போது ஆஷிஷ் விழுந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் ஆஷிஷ் கீழே விழுந்த நேரம் அவரின் தாய் அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய சென்றதாகவும், தந்தை பிரேம் இரவு பணி களைப்பால் உறங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
பிரேம் அவர்களுடன் பணிபுரியும் சக ஊழியர் சொன்ன பிறகே மகனின் நிலை குறித்து அறிந்ததாகவும், பின் மருத்துவமனை கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்த தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.