புயலுக்கு பயந்து வீட்டுக்குள்ள முடங்கிய குடும்பம்.. அத்தனை பேரையும் காப்பாத்திய ஒற்றை ஜன்னல் .. வைரலாகும் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த வாரம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீசிய இயான் புயலில் ஒரு குடும்பத்தினர் மட்டும் பாதுகாப்பாக தப்பித்திருக்கின்றனர். இதற்கு காரணம் அவர்களது வீட்டில் இருந்த ஜன்னல் தான் என்கிறார்கள் அந்த குடும்பத்தினர்.
இயான் புயல்
அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்த இயான் புயல் கடந்த வாரம் கியூபாவை தாக்கியது. இதனால் அந்நாட்டின் மின்கட்டுமானம் மொத்தமாக சேதமடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் கடுமையாக தாக்கியது. இதனால் கடுமையான மழைப்பொழிவு ஒரு பக்கமும், அதிவேக புயல்காற்று ஒருபக்கமும் போட்டு புளோரிடாவை சீர்குலைத்துவிட்டது.
இந்த இயான் புயல் அமெரிக்கா சந்தித்த மோசமான புயல்களில் ஒன்று என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். புளோரிடாவில் புயல் காரணமாக மணிக்கு 245 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல வீடுகள் மோசமாக சேதமடைந்திருக்கின்றன. புயல் காரணமாக 2 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2.5 மில்லியன் மக்கள் வெளியேறும்படி நகர நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
ஜன்னல்
இந்நிலையில், புளோரிடாவின் நேபிள்ஸ் நகரத்தில் வசித்துவரும் டிக்ஸி வாட்லி என்பவர் புயலின் போது, தனது வீட்டிலேயே தங்க முடிவெடுத்திருக்கிறார். புயல் காரணமாக கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள இவரது வீட்டைச் சுற்றி வெள்ள நீர் தேங்க துவங்கியிருக்கிறது. இருப்பினும் ஜன்னல்களை மூடிவிட்டு, பொறுமையுடன் காத்திருந்திருக்கிறார் இவர். அப்போது, வீட்டை சுற்றி தண்ணீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. ஆனால், ஜன்னல் வழியே துளியளவு தண்ணீர்கூட உள்ளே வரவில்லை.
இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"நாங்கள் புளோரிடாவின் நேபிள்ஸ் கடற்கரையில் வசிக்கிறோம். இயான் புயலின்போது நாங்கள் வீட்டிற்குள்ளேயே தங்கினோம். அப்போது கிடைத்த அனுபவத்திலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் ஜன்னலின் வெளியே பாதியளவு நீர் தேங்கி நிற்கிறது. அடுத்த ட்வீட்டில் அவர்,"ஜன்னலின் பிராண்ட் என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். அந்த ஜன்னலை பொருத்தி 15 வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் ஜன்னலில் சிறிய கசிவு ஏற்பட்டது. அப்போது அதனை சரிசெய்தோம். அதன்பிறகு எந்த தொந்தரவும் இல்லை. சிலர் கூறியதுபோல, ஜன்னல்களை பொருத்துவதும் மிக முக்கியமான வேலை என கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த புகைப்படம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
We live on the beach in Naples, Florida. We stayed through the Hurricane Ian. Thought I'd share a rather notable photo from the experience... pic.twitter.com/LziDWoVN78
— Dixie Whatley (@bothcoasts) October 1, 2022