'தடுப்பூசி பற்றாக்குறையா?.. அது யாரோட தவறு'?.. தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளை... காட்டமாக விமர்சித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவது குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகின்றன.
மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அவர்களுக்கு உரிய தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. மத்திய அரசு முன்னதாகவே போதுமான அளவுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு முன்பதிவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டபட்டது.
எனினும், போதுமான தடுப்பூசி இல்லாத காரணமாக மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை வழங்க முடியாமல் மத்திய அரசு திணறிவருகிறது. எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களில் மக்களுக்கு தொடர்ச்சியாக தடுப்பூசி போட முடியாத சூழல் உள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தவந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
அதைத் தொடர்ந்து, "தமிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசி ஒதுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார். அதேபோல, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களும் தடுப்பூசி வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர்கள் தடுப்பூசி கேட்பதற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளிடமிருந்தும், அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்தும் ஏராளமான கடிதங்கள் வருகின்றன. தரவுகளின் அடிப்படையில் தற்போதைய சூழலை எளிதாக புரிந்துகொள்ள முடியும். பயனற்ற அறிக்கைகளால் மக்களுக்கு பயத்தை மட்டுமே ஏற்படுத்த முடியும்.
ஜூலை மாதத்துக்கு எவ்வளவு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பதை ஜூன் 19-ம் தேதியே மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்பிறகு, ஜூன் 27 மற்றும் ஜூலை 13ம் தேதியும் ஒவ்வொரு நாளும் தடுப்பூசி இருப்பு குறித்து மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எப்போது எவ்வளவு தடுப்பூசி கிடைக்கும் என்று மாநிலங்களுக்கு முன்பாகவே தெரியும். அந்த வகையில், மாநிலங்கள் தெளிவாக திட்டமிட்டு தடுப்பூசி செலுத்தும் பணியைச் செய்தால் மக்களுக்கு எந்தப் பிரச்ச்சினையும் வராது' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊடகங்களில் குழப்பத்தையும், கவலையையும் உருவாக்கும் அறிக்கைகளை (தடுப்பூசி பற்றாக்குறை பற்றி) வெளியிடும் தலைவர்கள், அவர்கள் ஆளுமை மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்களில் இருந்து இவ்வளவு தூரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்களா இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
