‘அதுக்குள்ள என்ன அவசரம்’.. இப்படியே போச்சுன்னா கொரோனா ‘3-வது அலை’ கன்ஃபார்ம்.. இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் உயிரிழப்புகள் திடீரென அதிகரிக்க தொடங்கின. இதன்காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் மாநில அரசுகள் ஊரடங்கில் தொடந்து தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனால் வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், சுற்றுத்தலங்கள் என பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூட்டமாக கூடுவதால் கொரோனா மூன்றாம் அலை வேகமாக ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ‘இதுவரை சர்வதேச அளவில் கொரோனா தொற்று குறித்து நமக்கு கிடைக்கும் சான்றுகளை வைத்து பார்த்தால், மூன்றாவது அலை தவிர்க்க முடியாத ஒன்றுதான். இது உடனடியாக வர வாய்ப்புள்ளது.
சுற்றுலா, யாத்திரை, மத நிகழ்வுகள் அனைத்தும் தேவைதான். ஆனால், இன்னும் சில மாதங்கள் காத்திருக்கலாம். தடுப்பூசி முழுமையாக போடப்படாமல் மக்களை தடையின்றி கூட்டமாக செல்ல அனுமதிப்பது, கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கு வழிவகுக்கும்’ என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.