'கட்டுக்குள் வந்த கொரோனா!.. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா'?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடுவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது.

கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததையொட்டி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஜூலை 30ம் தேதி வரை உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த சில மாதத்திற்கு முன்பு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி அலகில் இருந்து திரவ ஆக்சிஜன் தயார் செய்யப்பட்டு கொரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெறும் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் மற்றும் அதன் பணி நிலவரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது, இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட திரவ ஆக்சிஜன் அளவு மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பப்பட்ட விவரம் உள்ளிட்ட தகவல்கள் பரிமாறப்பட்டன. அதுமட்டுமின்றி, ஆலை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு விளக்கம் தரப்பட்டது.
மேலும், இந்த அனுமதியை பயன்படுத்தி ஜூலை மாதத்திற்கு பின்னரும் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் தனது பணிகளை தொடருமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வேதாந்தா நிறுவனம் முற்றிலுமாக தூத்துக்குடி மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம். எனவே, நீதிமன்றம் அனுமதித்துள்ள கால அளவை தாண்டியும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை ஒருபோதும் தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை மீறினால் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் தூத்துக்குடியில் நிச்சயம் எழும் என்று ஆலை எதிர்ப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தான், தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியமில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். மேலும், மத்திய சுகாதாரத் துறையின் புதிய அமைச்சர் நேரம் தந்ததும் அவரை சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
