'இது ஆரம்பம் தான், இன்னும் பரவலாம்'... 'அமெரிக்காவுக்கு வந்த புதிய தலைவலி'... '2 குழந்தைகள் பலி'... அதிர்ச்சியில் பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுடன் புதிய அழற்சிநோயும் சேர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. இது அமெரிக்காவிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் உச்ச நிலையை அடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் அங்கு குழந்தைகளுக்கு கொரோனாவுடன் புதிய அழற்சி நோயும் சேர்ந்து பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட 17 மாகாணங்களில் இந்த தாக்குதல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூஸ் கியூமோ, நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''கொரோனாவுடன் புதிய அழற்சிநோயும் பரவுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு அபூர்வமான அழற்சி நோய். இதனால் நிலைமை மோசமாகி வருகிறது. இது குழந்தைகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு மரணத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நோயானது ‘பீடியாட்ரிக் மல்டி சிஸ்டம் இன்பிளமேட்ரி சிண்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது. இந்த நோய் தாக்கி 5 மற்றும் 7 வயதான 2 சிறுவர்கள், 17 வயது சிறுமி என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு நியூயார்க்கில் மட்டும் 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நியூயார்க் மாகாண பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தொற்று குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் 16 மாகாணங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சோகம் என்னவென்றால் நோய் இனி வரும் வாரங்களில் அதிகரிக்கக்கூடும். பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், சாப்பிடுவதில் பிரச்சனை ஏற்பட்டால், அடிவயிற்றில் வலி ஏற்பட்டாலோ, வயிற்றுப்போக்கு நேரிட்டாலோ, வாந்தி எடுத்தாலோ, சுவாசிப்பதில் சிக்கல் உண்டானாலோ, தோல் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்'' என கூறியுள்ளார்.
இந்நிலையில் நியூயார்க் நகரில் மட்டும் 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படடுள்ளது. ‘கவாசாகி’ நோயைப் போன்றது, இது இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது, பெரும்பாலும் குழந்தைகளைத்தான் பாதிக்கிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.
