கையில் மூட்டை.. எல்லையில் நின்று கதறி அழுத்த உக்ரைன் சிறுவன்.. மனசாட்சியை உலுக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் - போலந்து எல்லையில் இருக்கிறது மெடிஸ்கா என்னும் கிராமம். ரஷ்ய படைகளால் அஞ்சி உக்ரைன் மக்கள் இந்த கிராமத்தின் வழியே நடந்து சென்று போலந்தில் அகதியாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கையில் மூட்டையுடன் சிறுவன் ஒருவன், கதறி அழுதபடி இந்த கிராமத்து சாலையில் நடந்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
14 வது நாளாக தொடரும் போர்
உக்ரைனின் நேட்டோ இணைப்பு கருத்தை கடுமையாக எதிர்த்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. 14 ஆம் நாளான இன்று வரை உக்ரைனில் ரஷ்ய படைகள் களமாடிக்கொண்டு இருக்கின்றன.
இதுகுறித்து வீடியோ உரையில் பேசிய உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ்," ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளால் குறைந்தது 400 பொதுமக்களின் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரஷ்ய ராணுவம் 200 க்கும் மேற்பட்ட உக்ரேனிய பள்ளிகள், 34 மருத்துவமனைகள் மற்றும் 1,500 குடியிருப்பு கட்டிடங்களை அழித்துள்ளன" என அவர் கூறியுள்ளார்.
இன்று வரையில் சுமார் 15 லட்ச உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
சிறுவனுக்கு பெருகும் ஆதரவு
தனது நாட்டை விட்டு வெளியேறும் துக்கம் தாளாமல் கதறி அழும் சிறுவனின் வீடியோவை பலரும் கனத்த இதயத்துடன் கண்டுவருகின்றனர். மேலும், பலர் அந்த சிறுவனுக்கு அடைக்கலம் கொடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் தவறான முடிவு இப்படி பல சிறுவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் சிலர் கமெண்டில் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், மனித உரிமைகளுக்கான உக்ரைன் நாடாளுமன்ற ஆணையர் லியுட்மிலா டெனிசோவா, "யுக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து, 38 குழந்தைகள் இறந்துள்ளனர் மற்றும் 71 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்," என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Excruciating pic.twitter.com/PIutGEIN0F
— Josh Campbell (@joshscampbell) March 7, 2022