உக்ரைன் அதிபருக்கு ஸ்கெட்ச் போட்ட ரஷ்யா.. "முக்கிய டீமை உள்ள இறக்கிடுச்சு".. அதிகாரிகள் சொன்ன அதிரவைக்கும் செய்தி..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகமே பரபரப்புடன் ரஷ்யா - உக்ரைன் போரை கவலையுடன் கவனித்துவருகிறது. நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதனை அடுத்து பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.

அதன்பிறகு சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் பெலாரஸ் நாட்டின் வழியாக உக்ரைனுக்குள் நுழைந்தனர். இந்த நொடி வரையில் உக்ரைனின் முக்கிய கட்டுமானங்களை நோக்கி ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, உக்ரைன் அதிபர் வொலோடிமர் ஜெலன்ஸ்கியை கொல்வதற்கு சிறப்பு டீமை ரஷ்ய அனுப்பியதாக தகவல் வெளியாகி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வேக்னர் க்ரூப்
ரஷ்யாவின் தனியார் ராணுவ நிறுவனமான வேக்னர் க்ரூப் -ஐ மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் தடை செய்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல இந்த குழுவிற்கு ரஷ்யா உத்தரவு கொடுத்துள்ளதாக இங்கிலாந்தின் பிரபல தி டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியா, மொசாம்பிக், மாலி, சூடான், மத்திய ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த குழுவின் மூலமாக ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபரை கொல்லவும் ரஷ்யா உத்தரவிட்டதாக வெளிவந்த செய்தி உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிரியாவிலும்
2015 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக இந்த குழு தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த குழுவிற்கு ரஷ்யா நேரடியாக உத்தரவுகளை வழங்குகிறது என பரவலாக சொல்லப்பட்டாலும் ரஷ்யா அதனை மறுத்துவருகிறது. 2017 ஆம் ஆண்டு பிளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தக் குழுவில் சுமார் 6000 கூலிப்படையினர் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் முறியடிப்பு
இந்நிலையில் ரஷ்யாவின் செச்சன்யா பகுதியை சேர்ந்த கூலிப்படையினரை கொண்டு உக்ரைன் அதிபரை கொல்ல நடத்தப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் உக்ரைன் தேசிய பாதுகாப்புத்துறை கவுன்சிலின் செயலாளர் ஒலெக்சி தானிலோ தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் 24 தொலைக்காட்சி சேனலில் பேசிய தானிலோ,"இந்த மோசமான போரில் பங்கேற்க விரும்பாத ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் பிரதிநிதிகளிடமிருந்து எங்களுக்கு இதுகுறித்து தகவல் கிடைத்தது" என்றார்.
உக்ரைன் அதிபரை கொல்ல ரஷ்யா ரகசிய படைகளை அனுப்பிய விவகாரம் தற்போது உலகளவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
