"9 வருஷத்துக்கு முன்னாடியே ரஷ்யா அதை பண்ணிடுச்சு".. குண்டைத் தூக்கிப் போட்ட டெலிகிராம் ஓனர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல சோசியல் மீடியா அப்ளிகேஷனான டெலிகிராமை பெரும்பான்மையான உக்ரைனியர்கள் மற்றும் ரஷ்யர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? இதன்மூலம் ரஷ்யா தங்களது தகவல்களை திருடுமா? என உக்ரைன் மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் மக்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் எனவும் என்ன ஆனாலும் உக்ரைன் மக்களுக்காக நிற்பேன் என்றும் டெலிகிராம் நிறுவனத்தின் தலைவர் பாவெல் துரோவ் தெரிவித்து உள்ளார்.
அச்சம்
வாட்சாப் போல அன்றி டெலிகிராமில் end-to-end encrypted டெக்னாலஜி கிடையாது. இதனால் ரஷ்யா தங்களது ரகசிய தகவல்களை திருடலாம் என உக்ரைனைச் சேர்ந்த மக்கள் கவலை கொண்டுள்ளனர். மேலும், ரஷ்யா அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் டெலிகிராம் தங்களது தகவல்களை அளித்துவிடுமா? எனவும் உக்ரேனியர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கும் துரோவ், ஒருபோதும் உக்ரைனிய மக்களின் தகவல்களை ரஷ்யாவிற்கு அளிக்க மாட்டோம் என உறுதியளித்து உள்ளார்.
சொந்தம்
இதுபற்றி துரோவ் பேசுகையில்," நீங்கள் என்னுடைய பதிவுகளை தொடர்ந்து கவனித்து இருந்தால், எனது தாயின் பூர்வீகம் உக்ரைன் என்பது தெரிந்திருக்கும். இன்னும் எங்களது உறவினர்கள் உக்ரைனில் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்த போர் தனிப்பட்ட முறையிலும் நிறுவனம் சார்பிலும் எனக்கு கவலையை அளித்துள்ளது" என்றார்.
9 ஆண்டுகளுக்கு முன்பே..
ரஷ்யாவின் புகழ்பெற்ற சோசியல் மீடியாவான விகே-வின் தலைவராக இருந்தவர் துரோவ். 9 ஆண்டுகளுக்கு முன்னால், ரஷ்யாவில் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தகவல்களை அளிக்குமாறு ரஷ்ய ராணுவம் தன்னிடம் கோரிக்கை வைத்ததாகவும் அதனை மறுத்ததால் பணியிலிருந்து நீக்கப்பட்டதுடன் தனது வீடும் பறிக்கப்பட்டதாக கூறுகிறார் துரோவ்.
இதுகுறித்து துரோவ் பேசுகையில்,"இவை நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. பல விஷயங்கள் மாறிவிட்டன: நான் இப்போது ரஷ்யாவில் வசிக்கவில்லை, இனி அங்கு எந்த நிறுவனங்களிலும் என்னுடைய ஊழியர்களும் இல்லை. ஆனால் ஒன்று மாறாமல் உள்ளது - எதுவாக இருந்தாலும் எங்கள் பயனர்களுக்காக நான் துணை நிற்கிறேன். அவர்களின் தனியுரிமைக்கான உரிமை புனிதமானது. முன்னெப்போதையும் விட இப்போது இது மிக அவசியமாகி இருக்கிறது" என்றார்.
9 ஆண்டுகளுக்கு முன்பே, பொது மக்களின் தகவல்களை அளிக்குமாறு ரஷ்யா கோரிக்கை வைத்ததாக டெலிகிராம் ஓனர் சொல்லி இருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.