"ட்ரைனிங் னு சொல்லி தான் கூட்டிட்டு வந்தாங்க".. உக்ரைனில் பிடிபட்ட ரஷ்ய வீரர் போட்டுடைத்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மோசமான தாக்குதல் ஒன்றினை சந்தித்தது வருகிறது உக்ரைன். நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதனை அடுத்து பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இதனை அடுத்து கடல், வான், தரை என உக்ரைனை கடுமையாக தாக்கி வருகிறது ரஷ்யா.

இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் சொல்லிய தகவல்கள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
லவ் யூ அம்மா
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படையை சேர்ந்த சில வீரர்களை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்துள்ளது. இவர்களிடம் உக்ரைன் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், பிடிபட்ட ரஷ்ய வீரர் ஒருவர் தனது குடும்பத்துடன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில்," எங்களை மரணத்தை நோக்கி அனுப்பி இருக்கிறார்கள். எல்லோரும் எல்லோரையும் கொல்கிறார்கள். லவ் யூ டூ அம்மா" என கண்ணீருடன் ரஷ்ய வீரர் பேசுகிறார்.
பாதுகாப்பு கேடயம்
ரஷ்ய ராணுவம் தங்களை ராணுவ கேடயமாக உபயோகித்ததாக இன்னொரு ரஷ்ய வீரர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"பயிற்சிக்கு என்று சொல்லித்தான் எங்களை அழைத்துவந்தார்கள். எங்களிடம் பொய் சொல்லப்பட்டு இருக்கிறது. அதனாலேயே நான் இங்கு இருக்கிறேன்" என்றார்.
இதுபற்றி பேசிய மற்றொரு ரஷ்ய வீரர்,"ஆரம்பத்தில் நாங்கள் பயிற்சிக்கு செல்கிறோம் என்று கூறப்பட்டது. இறுதியில் நாங்கள் போரின் முன்னிலை படையாக அனுப்பப்பட்ட பிறகு அனைவரும் மனச்சோர்வடைந்தனர். யாரும் சண்டையிட விரும்பவில்லை, ஆனால் நாங்கள் உக்ரைன் அரசின் எதிரிகளாக இருப்போம் என்றும், போர்க்காலம் என்பதால் நாங்கள் சுடப்படலாம் என்றும் கூறப்பட்டது. நாங்கள் துப்பாக்கிகளின் இலக்காக களமிறக்கப்பட்டோம். எங்கள் பிரிவில் உள்ளவர்கள் சிலர் இந்த போரை விரும்பவில்லை. அவர்கள் வீட்டிற்குச் சென்று அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்" என்று கவலையுடன் குறிப்பிட்டார்.
செல்போனில் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோவை இங்கிலாந்து புலனாய்வு அமைப்பான ஷாடோ பிரேக் இன்டர்நெஷனல் வெளியிட்டுள்ளது.
தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உக்ரைனால் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் பேசும் வீடியோ தற்போது உலக அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்
