அமெரிக்காவை ‘அதிரவைத்த’ சம்பவம்.. இது எங்க ரூல்ஸுக்கு எதிரானது.. டிரம்புக்கு ‘ஷாக்’ கொடுத்த ட்விட்டர், பேஸ்புக்..!
முகப்பு > செய்திகள் > உலகம்வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இது ஒருபக்கம் இருக்க வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் பேசினார்.
டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வீடியோக்களை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். உடனே அந்த வீடியோக்கள் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இதனை அடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கினர்.
குறிப்பாக, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பேசிய வீடியோவை டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் தனது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் சில டுவிட்டுகள் செய்தார். இந்த டுவிட்டுகளும் வன்முறையை தூண்டும் வகையில் இருந்தததாக அவற்றையும் டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. மேலும் விதிகளை மீறியதற்காக அதிபர் டிரம்பின் தனிப்பட்ட டுவிட்டர் பக்கமும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரம் தனது டுவிட்டர் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாத என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து டிரம்ப் வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் தனிப்பட்ட டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை சுமார் 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.