'இந்த' திட்டத்தின் கீழ் மக்கள்... தனியார் மருத்துவமனைகளில்... 'இலவச' கொரோனா சிகிச்சை பெறலாம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 07, 2020 12:13 AM

பிரதமர் சுகாதார காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சையை மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Ayushman Bharat Scheme Allows Free Testing, Treatment Of Covid-19

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் நாளுக்குநாள் வேகமாக பரவ ஆரம்பித்து உள்ளது. இதை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. அரசு மருத்துவமனைகள் தவிர தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு மக்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் சுகாதார காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவசமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தும் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனாவுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் 50 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள பயனாளா்கள் கொரோனா பரிசோதனையை தனியாா் ஆய்வகங்களில் இலவசமாக பெறலாம்.

அதேபோல் கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சையை, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் பெறலாம். அவ்வாறு பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள், அல்லது அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுடன் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.