‘டாக்டர்கள், கேரள செவிலியர்கள் உட்பட’... ‘மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு’... ‘மும்பையில் 2 மருத்துவமனைகள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 07, 2020 01:46 AM

மும்பையில் கொரோனா பாதிப்பால் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என பலப் பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Doctors, including Kerala nurses test positive 2 Mumbai Hospitals seal

மும்பையில் ஒக்கார்ட் குழுமத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்பட 52 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் இருந்து மும்பைக்கு சென்று பணியாற்றிய 40 செவிலியர்களும் அடங்குவர். அந்த மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 17-ம் தேதி, ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை காரணமாக 70 வயது முதியவர் ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இறந்தும் போனார். இதையடுத்து அப்போது சிகிச்சையின்போது உடனிருந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 40 கேரள செவிலியர்கள், 3 மருத்துவர்கள் உள்பட 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இதற்கிடையில், மும்பையில் ஜாஸ்லோக் மருத்துவமனையில் 6 செவிலியர்கள் உட்பட 10 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 2 மருத்துவமனைகளும் சீல் வைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மும்பை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி ஆட்கள் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 40 செவிலியர்களின் நிலை குறித்து கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளார்.