''கொரோனா என்பது சிறிய காய்ச்சல் தான்...'' ''இதற்காக ஊரடங்கு தேவையில்லை...'' 'அதிபரின் அறியாமையால் பலி கொடுக்கும் நாடு...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸின் தீவிரத்தன்மையை உணராத பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ கொரோனா வைரசை 'சிறிய காய்ச்சல்’ என்றும் அதனால் நாட்டிற்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டாம் என்றும் தெரிவித்து வருவதால், அந்நாட்டில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கலக்கமடைந்தள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில், 72 ஆயிரத்து 899 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த உயிரிழப்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவேளியில் நடந்துள்ளது.
போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், வைரஸ் யாருக்கு பரவியிருக்கிறது என்ன கண்டறிய போதிய பரிசோதனை கருவிகள் இல்லாததாலும் வைரஸ் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளிலேயே உயிரிழந்துவரும் கொடுமையான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து கொரோனாவுக்கு அடுத்த இலக்காக பிரேசில் நாடு மாறி வருகிறது.
கொரோனா வைரஸின் தீவிரத்தன்மையை உணராத அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ கொரோனா வைரசை 'சிறிய காய்ச்சல்’ என்றும், அதனால் நாட்டிற்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டாம் எனவும் தெரிவித்து வருகிறார்.
மேலும், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சரான லூயிஸ் ஹெண்டிக்யூ மண்டிட்டாவையும் அதிபர் போல்சனரோ கடந்த 18-ம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் அந்நாடு அதிக உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.
