'கிரேட் எஸ்கேப் பார்ட் 2...' 'போலீசாருக்கு' 'டிமிக்கி' கொடுத்து 'மாயமான மாயாண்டி...' 'கை கொடுத்த கொரோனா...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைப்பதற்காக அழைத்து வரப்பட்ட கைதி, தனக்கு கொரோன இருப்பதாக கூறி ஏமாற்றி எஸ்கேப் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்கடி மாவட்டம் நெல்லை ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் மீது கொள்ளை, அடிதடி என 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக மாயாண்டியை கைது செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி, நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது தப்பிக்க நினைத்த மாயாண்டி, அடிக்கடி சத்தமாக இருமியுள்ளார். தனக்கு காய்ச்சல் வருவது போன்று இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்தனர்.
இதையடுத்து, போலீசார் வார்டுக்கு வெளியே காவலில் ஈடுபட்டிருந்தபோது, மருத்துவரிடம் கழிவறை செல்ல வேண்டும் எனக் கூறி மாயாண்டி சென்றுள்ளார். கழிவறை சென்ற மாயாண்டி நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் மாயாண்டி ஜன்னல் வழியாக வெளியேறி, பின்பக்க சுவர் வழியாக ஏறிக்குதித்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மாயாண்டியை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். கொரோனா எனக் கூறி போலீசாரிடமிருந்து மாயாண்டி தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
