பாகிஸ்தான் எங்களுக்கு ரெண்டாவது வீடு.. ‘இந்த நேரத்துல இந்தியாவுக்கு ஒன்னு சொல்லிக்கிறோம்...!’.. தாலிபான் தலைவர் பரபரப்பு பதில்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் குறித்து கேள்விக்கு தாலிபான் செய்தித் தொடர்பாளர் முக்கிய பதிலளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் இருந்து தொடர்ந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். இதற்காக ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவித்துள்ளனர்.
இந்த சூழலில் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே ஐஎஸ் கோரோசான் பயங்கரவாத அமைப்பு தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 100-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காபூலில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஆப்கான் விவகாரங்களை உற்று நோக்கி வருவதாகவும், காஷ்மீர் பள்ளதாக்கில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் முப்படைகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லாஹ் முஜாஹித் (Zabihullah Mujahid) India Today சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் தாலிபான்கள் பாகிஸ்தான் பக்கம் நிற்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘எங்களால் இனி எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் இருக்காது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். தாலிபான்கள் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பதை உறுதியாக கூறுகிறோம்.
பாகிஸ்தான் எங்களுக்கு இரண்டாவது வீடு. அதனால் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறோம். அதேவேளையில் அனைத்து நாடுகளுடனும் இணக்கமாக இருக்கவே விரும்புகிறோம்’ என ஜபிஹுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.