மொத்த ‘அமெரிக்க’ படை வெளியேறினதும்... வேகவேகமாக ‘காபூல்’ விமான நிலையத்தில் குவிந்த தாலிபான்கள்.. உலக நாடுகளுக்கு சொன்ன ‘முக்கிய’ செய்தி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானில் இருந்து மொத்த அமெரிக்க படைகளும் வெளியேறியதை காபூல் விமான நிலையத்தில் தாலிபான்கள் கொண்டாடினர்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கு உதவி வந்த அமெரிக்க படைகள் திரும்ப பெறுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தமும், ஆப்கானின் முக்கிய பகுதிகளை தாலிபான்கள் வேகமாக கைப்பற்றினர். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்க படைகள் அனைத்தும் இன்றுடன் (31.08.2021) வெளியேற வேண்டும் என தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதன்படி ஆப்கானில் இருந்த தங்களது அனைத்து ராணுவ வீரர்களையும் அழைத்துக்கொண்டு கடைசி விமானம் புறப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.
சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கானில் இருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதை தாலிபான்கள் வான வேடிக்கைகளுடன் கொண்டாடினர். இதனை அடுத்து காபூல் விமான நிலையத்தில் குவிந்த தாலிபான்கள், அங்கு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடினர்.
அப்போது பேசிய தாலிபான்கள் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத், ‘ஆப்கானிஸ்தான் இனி சுதந்திரமான நாடு. அமெரிக்கா தோற்றுவிட்டது. அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்த விரும்புகிறோம். இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடைபெறும். அதேவேளையில் ஆப்கான் மக்களின் சுதந்திரம் காக்கப்படும். நமது வெற்றி அந்நிய படைகளுக்கு ஒரு பாடம். இனி தாலிபான்கள் கண்ணியமாக நடந்து கொள்வார்கள்’ என உலக நாடுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.