பல கணவர்களை திருமணம் செய்ய... பெண்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டம்!.. சரியா?.. தவறா?.. சர்ச்சையான விவகாரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் பாலிண்ட்ரி சட்டம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா ஏற்கனவே உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இங்கு ஒரே பாலின திருமணங்களையும், ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதும் அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாலின உரிமை ஆர்வலர்கள், பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைக் வைத்துக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி அளிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். இது சட்டப்பூர்வமாக்கப்படுவது குறித்து உள்துறை பாலிண்ட்ரி திட்டத்தை முன்மொழிந்து உள்ளது. இதனால் நாட்டின் பழமைவாதிகள் மற்றும் சில மதக் குழுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பாலிண்ட்ரி திட்டம், தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மூசா மெசெலு, பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, "இது ஆப்பிரிக்க கலாச்சாரத்தை அழித்துவிடும். அந்த மக்களின் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? அவர்கள் அடையாளத்தை எப்படி அறிந்து கொள்வார்கள்? பெண் எப்போதும் ஆணின் ஆளுமையை எடுக்க முடியாது" எனக் கூறினார்.
ஆப்பிரிக்க கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரெவரெண்ட் கென்னத் மெஷோ பேசுகையில், "பலதார மணம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. ஆனால் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. பல கணவர்களுடன் ஒரு பெண் இருக்க முடியாது, ஏனெனில், ஆண்கள் பொறாமை மற்றும் ஆதிக்க சக்தி உடையவர்கள்" எனக் கூறினார்.
இஸ்லாமிய அல்-ஜமா கட்சியின் தலைவர் கனீப் ஹென்ட்ரிக்ஸ் கூறியதாவது, "ஒரு குழந்தை பிறக்கும்போது நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள் தந்தை யார் என்பதைக் கண்டறிய அதிக டி.என்.ஏ சோதனைகள் தேவைப்படும்" எனத் தெரிவித்தார்.
ஒரு பெண் பல கணவர்களை வைத்துக்கொள்ளும் பாலிண்ட்ரி சட்டம் குறித்து ஆய்வுகள் நடத்திய கல்வியாளர், பேராசிரியர் கொலிஸ் மச்சோகோ பிபிசியிடம் கூறும் போது, "ஆப்பிரிக்க சமூகங்கள் உண்மையான சமத்துவத்திற்கு தயாராக இல்லை. எங்களால் கட்டுப்படுத்த முடியாத பெண்களை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியாது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.