"இனி உங்களோட பிசினஸ் பண்ண மாட்டோம்".. ரஷ்யாவிலிருந்து வெளியேறும் முக்கிய பெட்ரோல் நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நேட்டோ அமைப்போடு உக்ரைன் இணைவதாக முடிவெடுத்ததை தொடர்ந்து அதனை முறியடிக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதனால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மிக மோசமான தாக்குதல் ஒன்றினை உக்ரைன் சந்தித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள பல நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றன.

வெளியேறிய ஷெல்
உலகளாவிய ஆயில் மற்றும் கேஸ் துறையில் மிக முக்கிய நிறுவனமாக அறியப்படும் ஷெல், ரஷ்யாவின் Gazprom நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்தது. ரஷ்யாவின் பிற எண்ணெய் நிறுவனங்களில் 27.5% முதலீட்டை ஷெல் நிறுவனம் செய்திருக்கிறது. அதேபோல, சைபீரியாவில் எண்ணெய் உற்பத்தி களங்களை அமைக்கும் இரண்டு திட்டங்களில் 50 சதவீத முதலீட்டை ஷெல் நிறுவனம் செய்து இருந்தது. இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து முழுவதுமாக வெளியேறுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருப்பது தொழில்துறை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதேபோல, மேற்கு ஐரோப்பாவிற்கு ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை கொண்டுசெல்லும் பிரம்மாண்ட Nord Stream 2 திட்டத்திலும் அங்கம் வகித்துவந்த ஷெல் நிறுவனம் தற்போது அதிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பென் வான் பியூர்டன்," உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். ஐரோப்பிய பாதுகாப்புக்கு எதிரான ரஷ்யாவின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணம்?
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்ய தொழில்துறை கடுமையான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 20 சதவீதம் வரையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மேலும், ஷெல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஐரோப்பிய நிறுவனங்கள் தந்த அழுத்தமே ஷெல் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.
படையெடுக்கும் நிறுவனங்கள்
ரஷ்யாவின் போர் முடிவை பல்வேறு நாடுகளும் எதிர்த்துவரும் நிலையில் ரஷ்யாவில் இயங்கி வந்த பல முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றன. ரோல்ஸ் ராய்ஸ், டெல் கம்யூட்டர், இன்டெல், ஃபார்முலா ஒன், யூரோ ஃபுட்பால் கழகம், ப்ரிமீயர் லீக், டெல்டா ஏர்லைன்ஸ், நார்வே மியூச்சுவல் ஃபண்ட், பிரிட்டிஷ் பெட்ரோலியம் என அந்தப் பட்டியல் நாள்தோறும் நீள்கிறது.
இந்நிலையில் ஆயில் மற்றும் கேஸ் துறையின் முன்னணி நிறுவனமான ஷெல் ரஷ்யாவில் இருந்து விலகி இருப்பது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
