BREAKING: மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் 26 வயது மகன் உயிரிழப்பு! அதிர்ச்சியில் தொழில்நுட்ப உலகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்துவரும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா-வின் மகன் ஜெயின் நாதெள்ளா இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயின் நாதெள்ளாவிற்கு 26 வயதாகிறது.
ஜெயின் நாதெள்ளா மறைவு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,"நமது CEO சத்யா நாதெள்ளா அவர்களின் மகன் ஜெயின் நாதெள்ளா மறைவால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
சத்யா நாதெள்ளா
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த சத்யா நாதெள்ளா அங்கேயே தனது பள்ளிப் படிப்பினை முடித்திருக்கிறார். அதன் பின்னர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் பொறியியல் படித்தார். அதன் பின்னர் அமெரிக்கா சென்ற சத்யா, அங்கே புகழ்பெற்ற விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சைன்ஸ் பிரிவில் மேற்படிப்பையும் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையும் படித்திருக்கிறார்.
மைக்ரோசாஃப்ட் -ல்
1992 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சத்யா நாதெள்ளா தனது கடின உழைப்பின் பலனாக 2014 ஆம் ஆண்டு அதே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உயர்ந்தார். அதுமட்டுமல்லாமல் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-ன் நம்பிக்கைக்குரிய நபராகவும் சத்யா நாதெள்ளா அறியப்படுகிறார்.
ஜெயின் நாதெள்ளா
சத்யா நாதெள்ளாவிற்கு ஜெயின் நாதெள்ளா தவிர திவ்யா நாதெள்ளா மற்றும் தாரா நாதெள்ளா என்ற இரு மகள்களும் உள்ளனர். பிறவியிலேயே பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஜெயின் நாதெள்ளா அதற்கான சிகிச்சையினை சில்ட்ரன்ஸ் மருத்துவமனையில் பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று அவர் மரணமடைந்திருக்கிறார்.
இதனிடையே, ஜெயின் நாதெள்ளாவின் இறப்பை முன்னிட்டு அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் ஸ்பெரிங் வெளியிட்டுள்ள செய்தியில்," என்றும் ஜெயின் அவரது இசை ரசனைக்காகவும் அவரது அழகான புன்னகையின் மூலமாகவும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்திற்கும் அவர் நேசித்தவர்களுக்கும் ஜெயின் பெரும் மகிழ்ச்சியை கொண்டுவந்தவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் CEO ஆன சத்யா நாதெள்ளாவின் மகன் இளம் வயதில் உயிரிழந்திருப்பது தொழில்நுட்ப உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.