‘ஆய்வகத்தில்’ உருவாக்கப்பட்டு ‘அக்டோபர்’ மாதம்... கொரோனாவை ‘வுஹானில்’ பரப்பியது ‘இவர்தான்’... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிர்ச்சி’ செய்தி...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு வுஹானில் பரப்பப்பட்டதாக சீனா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலாகப் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தற்போது ஒட்டுமொத்த உலகமும் முடங்கியுள்ளது. தொடக்கத்தில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட சீனா தற்போது பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் செய்வதறியாது திணறி வருகின்றன. இந்நிலையில் இரு பெரும் நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கொரோனா பரவலுக்கு இந்த நாடு தான் காரணம் என தங்களுக்குள் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
தொடக்கம் முதலே கொரோனா வைரஸை அமெரிக்கா ‘சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டு வருவதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள சீனா, “முதன்முதலாக கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இந்த வைரஸ் சீனாவில்தான் உருவானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் எப்படி, எங்கு உருவானது எனக் கண்டறியும் பணியில் சீனா இறங்கியுள்ளது. அதுகுறித்து அந்நாட்டு அரசின் ‘க்ளோபல் டைம்ஸ்’ எனும் ஆங்கில நாளிதழில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்திக் கட்டுரையில், அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் SARS-CoV-2 வைரஸ் ஹூபே மாகாணத்துக்குக் கொண்டு வரப்பட்டது எனவும், வுகான் நகரில் அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தைய வீரர் ஒருவர் அதை பரப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸுக்கும் அந்த சைக்கிள் பந்தைய வீரருக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி அதில் எதுவும் விளக்கப்படவில்லை. மேலும் அதற்கான அடிப்படை ஆதாரங்கள் குறித்தும் அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக சீனாவில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்துதான் கொரோனா பரவியதாக அந்நாட்டின் மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் தொடர் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவும் தற்போது வரை சீனாவில்தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்காக ஆதாரங்கள் எதையும் வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.