'வெளிய போக முடியாது, அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்...' 'பனையோலையில் விசிறி, இன்னும் பல பொருட்கள்...' ஊரடங்கை உபயோகப்படுத்தும் எஞ்சினியரிங் பட்டதாரி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை அருமையாக உபயோகிக்கும் பி.இ. பட்டதாரி பனையோலை விசிறி, குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் என கலக்கி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் கடந்த 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 144 ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. பொது மக்களில் சிலர் மட்டும் அரசின் உத்தரவுக்கு செவிசாய்க்காமல் இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றிவருகின்றன. இதனை தடுக்கும் வகையில் போலீசார் பல வினோதமான தண்டனைகளையும், ஒரு சில இடங்களில் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய இந்த விடுமுறை காலத்தை பயன்படும் வகையில் மாற்றியுள்ளார்.
கனகராஜ் (33) என்னும் பி.இ.பட்டதாரி இளைஞர் சேலம் மாவட்டதின் சங்ககிரி பகுதியில் சுய தொழில் செய்துவருகிறார். பி.இ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் படித்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், தமிழ் என்ற மகனும் உள்ளனர். கனகராஜ் நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாரிகள், வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ஆடியோ சிஸ்டம் செய்து கொடுத்து வருகிறார்.
மேலும் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்புடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்றுகள் நடுதல், அவைகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
தற்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால், நேரத்தை வீணடிக்காமல் அவரது வீட்டருகே உள்ள பனை மரத்தின் இலைகளைக் கொண்டு விசிறிகள், விளையாட்டுப் பொருள்களையும் செய்து வருகிறார்.
கனகராஜ் அவர்கள் இதைப்பற்றி கூறுகையில் " இப்பொழுது ஊரடங்கு உத்தரவால் வெளியே செல்ல முடியவில்லை. என்னுடைய ஓய்வு நேரத்தை தவிர மற்ற நேரங்களை எப்படி உபயோகிக்கலாம் என யோசிக்கும் போது தான் பனை ஓலைகளைக் கொண்டு ஏன் பொருள்கள் தயாரிக்கக் கூடாது என்ற யோசனை வந்தது. உடனே என்னுடைய வீட்டுக்கு அருகில் இருக்கும் பனை ஓலைகளை சேகரிக்க தொடங்கினேன். அதை வைத்து முதலில் விசிறிகளைச் செய்ய கற்றுக்கொண்டேன். இப்போது குழந்தைகள் விளையாடும் பொருட்களை செய்ய முடிவு செய்துள்ளேன்.
இதுமட்டும் இல்லாமல் என்னுடைய வீட்டில் இருக்கும் வேப்ப மரத்திலிருந்து கீழே விழுந்துள்ள பூக்களைச் சேகரித்துச் சமையலுக்குப் பயன்படுத்தியும் வருகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.