பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு.. இந்தியரான ரிஷி சுனக் 3-வது சுற்றிலும் வெற்றி.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியரான ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறார்.
இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்றார். இந்நிலையில், பல்வேறு சிக்கல்கள் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்க இருப்பதாகவும் கடந்த வாரம் அறிவித்திருக்கிறார். இதனையடுத்து கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பிரதமர் பதவிக்கு போட்டிபோட்டு வருகின்றனர். இதில் இந்திய பூர்வீகத்தை சேர்ந்த ரிஷி சுனக்-கும் ஒருவர்.
ரிஷி சுனக்
இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் பிறந்த ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.
முன்னணி
கடந்த 7 ஆம் தேதி, போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடத்திவருகிறது. பல கட்டமாக நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு உறுப்பினர்களில் இருந்து ஒருவரை அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்கெடுப்பிலும் ரிஷி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். இதனையடுத்து நான்காவது சுற்றுக்குள் அவர் நுழைந்திருக்கிறார். மூன்றாவது சுற்றில் ரிஷி சுனக் 115 வாக்குகளையும், பென்னி மோர்டான்ட் 82 வாக்குகளையும், லிஸ் டிரஸ் 71 வாக்குகளையும், கெமி படேனோச் மற்றும் டாம் துகென்தாட் முறையே 58 மற்றும் 31 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். இதில் குறைவான வாக்குகளை பெற்ற டாம் துகென்தாட் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் ரிஷி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இனிவரும் சுற்றுகளில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில் பிரிட்டன் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமை ரிஷிக்கு கிடைக்கும்.
Also Read | வரலாற்றில் முதல் முறை.. கடும் வீழ்ச்சியை சந்தித்த டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு..முழு விபரம்..!