இங்கிலாந்து நாட்டில் தற்போது பிரதமராக இருந்து வருபவர் போரிஸ் ஜான்சன். ஆனால், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ஜான்சன் விரைவில் பதவியிழக்க நேரிடும் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக மொத்த இங்கிலாந்தும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்தபோது, பிரதமர் அலுவலகத்தில், அலுவலக ஊழியர்கள் எதையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மது விருந்துகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அப்படி நடந்த ஒரு பார்ட்டியில் பிரதமர் போரிஸ் ஜான்சனே கலந்து கொண்டிருக்கிறார். இதற்காக அவர் பொது தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். இருந்தும், இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து யார் இங்கிலாந்தின் அடுத்தப் பிரதமராக பதவியேற்பார் என்கிற கேள்வி அந்நாட்டில் பெரும் விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தப் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு வெற்றி பெறுவதில் அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம்.
அவரின் பெயர் ரிஷி சுனாக். பிரிட்டனைச் சேர்ந்த இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர் ரிஷி. வின்சஸ்டர் கல்லூரியில் அரசியல் படித்த அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் பொருளாதாரம் படித்து முடித்தார். மேலும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ கற்றார்.
ரிஷி, பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நாரயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியை மணந்து கொண்டார். தற்போது ரிஷி - அக்ஷதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன.
அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, யார்க்ஷையர் பகுதியைச் சேர்ந்த ரிச்மண்ட் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கன்சர்வேடிங் கட்சியில் சேர்ந்து அரசியல் களம் கண்டதிலிருந்து ஒரு சில ஆண்டுகளிலேயே கட்சியின் முக்கிய ஆளாக மாறினார் ரிஷி. தற்போது தனது கட்சியின் பெரும்பாலானோரின் ஆதரவு ரிஷிக்கு இருப்பதால் போரிஸுக்கு அடுத்து அவர்தான் பிரதமர் என்று பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் அதிக ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருகிறார் ரிஷி. இது அவரை மேலும் பிரபலமாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
