வரலாற்றில் முதல் முறை.. கடும் வீழ்ச்சியை சந்தித்த டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு..முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயை எட்டியுள்ளது. இது பலரையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அமெரிக்க டாலரின் தேவை உலக அளவில் அதிகரித்திருப்பது ஆசிய கரன்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 79.98 ஆக சரிந்தது. இதனிடையே இன்று காலை சந்தை துவங்கிய உடனேயே இது மேலும் சரிவை சந்தித்து 80 ரூபாயை எட்டியிருக்கிறது.
வீழ்ச்சி
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) படி, 2014 ஆம் ஆண்டில், ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.63.33 ஆக இருந்தது என்று நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.41 ஆக சரிந்திருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை தடைபட்டதால் இந்தியா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவந்தன.
இந்நிலையில், சமீப காலமாக இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை திரும்ப பெறுவதால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகிறது. இதுவரையில் சுமார் 1650 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றிருக்கின்றனர். இதுவும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைய ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
விலை உயர்வு
மேலும், உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்தன. உலக நாடுகள் டாலர்களை வாங்கி குவித்துவருவதால் டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனிடையே அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதுவும் டாலர் மதிப்பு உயர வழிவகுத்திருப்பதாக கூறப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவதற்கு மற்றொரு காரணம் அந்நிய செலாவணி கையிருப்பு. இந்த ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் அந்நிய செலாவணி கையிருப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கீழே சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2.563 கோடி டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையேயான விகிதமே வர்த்தக பற்றாக்குறை எனப்படுகிறது. இதுவும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைய காரணமாக அமைந்திருக்கிறது.
வரலாற்று உச்சமாக டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 80 ரூபாயை தொட்டிருப்பது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | சைடிஷ் வாங்குவதில் வந்த தகராறு.. நண்பர்களின் செயலால் நடுங்கிப்போன மக்கள்.. திருவள்ளூரில் பரபரப்பு..!