RUSSIA-UKRAINE WAR: .. கதிகலங்கி நிற்கும் உக்ரைன்.. ஜப்பான் தொழிலதிபர் செய்த உருக்கமான காரியம்..
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உக்ரைன் அரசாங்கத்திற்கு 1 பில்லியன் யென் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது பிப்ரவரி 24 முதல் போரை தொடர்ந்தார். உக்ரைன் வீரர்களும் விட்டு கொடுக்காமல் தங்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் பொதுமக்கள் துப்பாக்கி ஏந்தி ரஷிய வீரர்களின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். உக்ரைனில் முறையான பயிற்சி இன்றி நாட்டை காக்க துப்பாக்கி ஏந்தியுள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அப்பாவிகளும் பலியாகி வருகின்றனர்.
ரஷ்யாவின் கோரப்பிடியில் உக்ரைன்
உக்ரைன் மீது பல முனைகளில் இருந்தும் ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்தை வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய படைகள், உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்யா விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போலந்தின் வார்ஸா, துருக்கியின் இஸ்தான்புல், ஹங்கேரியின் புடாபெஸ்ட், அல்லது பாக்கூ, பிராடிஸ்லாவா என சில நகரங்களின் பட்டியலைக் கொடுத்து இங்கு ஏதாவது ஓரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உலக நாடுகள் எச்சரிக்கை
இந்த நிலையில், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் நாடியுள்ளது. உக்ரைன் அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில், போர் சேதம் மற்றும் உயிரிழப்புக்கு ரஷ்யாவே முழு பொறுப்பேற்க வேண்டும். உக்ரைனில் இனப்படுகொலை நடப்பதாக சித்தரித்து போருக்கு வழிவகுத்து இருக்கிறது. அடுத்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு என்று எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், உக்ரைன் மோதல் மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றும் ரஷ்யா மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் உலகம் தயாராக இருக்க வேண்டும் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் தொழிலதிபர் உருக்கம்
இந்நிலையில், ஜப்பானின் ராகுடென் இ-வர்த்தக நிறுவனத்தின் நிறுவனர் ஹிரோஷி மிகிதானி உக்ரைன் அரசாங்கத்திற்கு 1 பில்லியன் யென் வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 65 கோடி ஆகும். மேலும், "ஹிரோஷி மிகிதானி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அக்கடிதத்தில் "இந்த 1 பில்லியன் யென், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக உக்ரைன் மீதான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகிறேன். என்னுடைய எண்ணங்கள் அதிபர் ஜெலென்ஸ்கியோடும் உக்ரைன் மக்களோடும் இருக்கிறது.
உக்ரைன் பக்கம் நிற்கிறேன்
நியாயமற்ற முறையில், அமைதியான உக்ரைனை மிதிப்பது ஜனநாயகத்திற்கு ஒரு சவால் என்று நான் நம்புகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் இந்தப் பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க முடியும். உக்ரைன் மக்கள் கூடிய விரைவில் மீண்டும் அமைதி பெற முடியும் என்றும் நான் உண்மையாக நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் உக்ரைனுக்கு நன்கொடைகள் அளித்து வருகின்றன.
ஜப்பான் அரசாங்கம் ரஷ்யா மீதான சொத்துக்களை முடக்குவதாகவும் ரஷ்ய இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு செய்யப்படும் ஏற்றுமதியை தடை செய்வதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.