10 நிமிஷம் எந்த பதிலும் வரல.. ‘அய்யோ ஃப்ளைட்டை யாரோ கடத்திட்டாங்க’.. பதறிப்போன அதிகாரிகள்.. கடைசியில் தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்நடுவானில் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியதாக அதிகாரிகள் பதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து ரோம் நோக்கி ஐடிஏ ஏர்லைன்ஸ் விமானம் சென்றுகொண்டு இருந்துள்ளது. விமானம் பிரான்ஸ் வான்வெளியில் பறந்துகொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தை தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால் விமானியிடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை. அதனால் தீவிரவாதிகள் விமானத்தை கடத்திவிட்டார்களோ என பதறிப்போன அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு தகவலை அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிகாரிகள் இரண்டு போர் விமானங்களை தயார் செய்தனர். மேலும், இதுதொடர்பாக இத்தாலி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த களேபரங்களுக்கு மத்தியில் சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு விமானி, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் விசாரித்தபோது கடத்தல் ஏதும் நடைபெறவில்லை எனக் கூறினார். இதனை அடுத்து ஏன் 10 நிமிடங்கள் சிக்னல் நின்றது என விமானியிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று விமானி கூறினார். ஆனாலும் விமானியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, நடுவானில் விமானி தூங்கிய அதிர்ச்சி உண்மையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
நடுவானில் ஆட்டோபைலட் வசதியில் விமானம் இயங்கிக் கொண்டிருந்தபோது, விமானி தூங்கியுள்ளார். இதனால்தான் தகவல் தொடர்பு முடக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட விமானியை ஏர்லைன்ஸ் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானி தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.