UPSC 2021: இந்தியாவுலயே முதலிடம் பிடித்த மாணவி.. யார் இந்த ஸ்ருதி ஷர்மா?
முகப்பு > செய்திகள் > இந்தியாயுபிஎஸ்சி 2021 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி ஷர்மா இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
யுபிஎஸ்சி
ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய குடிமைப் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான எழுத்து தேர்வுகள் இந்த ஆண்டு ஜனவரி மாதமும், நேர்காணல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்றன. இந்த தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். இதில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி ஷர்மா எனும் மாணவி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஸ்ருதி ஷர்மா
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ருதி தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இவர் பிரபல St. Stephen's கல்லூரியின் முன்னாள் மாணவியாவார். அதன்பிறகு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை தொடர்ந்த இவர், குடிமை பணிகளுக்கான பயிற்சியையும் மேற்கொண்டுவந்துள்ளார். அதன் பின்னர் தனியார் பயிற்சி மையம் ஒன்றில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்துவந்த இவர் தற்போது இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
நான்கு ஆண்டுகள் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்துவந்த ஸ்ருதி ஷர்மா இதுபற்றி பேசுகையில்,"என்னுடைய பயணத்தில் எனக்காக துணை நின்றவர்களுக்கு நன்றி கூறுகிறேன். குறிப்பாக எனது பெற்றோர். எப்போதும் எனக்கு அவர்கள் பக்கபலமாக இருந்தார்கள்" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
முதல் மூன்று இடங்களிலும் பெண்கள்
இன்று வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் முதல் மூன்று இடங்களிலும் பெண்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஸ்ருதி ஷர்மா முதலிடத்தையும், அங்கிதா அகர்வால் இரண்டாம் இடத்தையும் காமினி சிங்லா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ இந்த தேர்வில் இந்திய அளவில் 42ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
வாழ்த்து தெரிவித்த மோடி
இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"இந்தியா தனது வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில் இருக்கும் இந்த தருணத்தில் குறிப்பாக நாம் 'அசாதி கா அம்ரித் மஹாட்சவ்' கொண்டாடத்தில் (75 ஆவது சுதந்திர தின விழா) உள்ள நேரத்தில் தங்களின் நிர்வாக பணிகளை தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.