கொஞ்ச நேரம் கூட சந்தோஷம் நீடிக்கல.. வென்ற வெண்கலப்பதக்கத்தை ‘திரும்ப’ பெற்ற ஒலிம்பிக் கமிட்டி.. இந்திய வீரருக்கு நேர்ந்த சோகம்.. என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரருக்கு வழங்கப்பட்ட பதக்கம் திரும்ப பெறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்கங்களை குவித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்திய தடகள வீரர் வினோத் குமாருக்கு வழங்கப்பட்ட வெண்கலப்பதக்கம் திரும்ப பெறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
41 வயதாகும் வினோத் குமார் இந்திய எல்லை பாதுக்காப்பு படையில் பணியாற்றி வந்தார். அப்போது பனிச்சரிவில் சிக்கி அவரது கால்கள் முழுவதும் செயலிழந்து போனது. அதனால் அவரது சொந்த ஊரில் பலசரக்கு கடையை நடத்தி வருகிறார். இந்த சூழலில் 2016-ம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத்திறனாளியான தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.
இதைப் பார்த்த வினோத் குமாருக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. இதனை அடுத்து விளையாட்டில் முழு ஈடுபாட்டுடன் விளையாட ஆரம்பித்துள்ளார். இதன் பலனாக கடந்த மார்ச் மாதம் ஒலிம்பிக் போட்டியில் F52 பிரிவில் பங்கேற்க பாரா ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அந்த பிரிவில் வினோத் குமார் விளையாட தகுதியானவர் என ஆகஸ்ட் மாதம் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் 19.91 மீட்டர் தூரம் வீசி மூன்றாம் இடம் பிடித்தார். அதனால் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியானது. இந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. F52 பிரிவில் அவருடன் பங்கேற்ற வீரர்கள், வினோத் குமார் இந்த பிரிவில் விளையாட தகுதியானவரா? என சோதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பொதுவாக பாரா ஒலிம்பிக் போட்டியில், வீரர்களின் உடல் குறைப்பாட்டை வைத்துதான் குறிப்பிட்ட பிரிவின் கீழ் விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். உடல் குறைபாட்டில் சம அளவு உள்ள வீரர்கள் மட்டுமே ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே இதுபோல் செய்யப்படுகிறது.
அந்த வகையில் வினோத் குமார் பங்கேற்ற F52 பிரிவில், தசைபலம் தளர்வு, கை, கால்களில் குறைபாடு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பு உள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அதன்படி நடத்தப்பட்ட சோதனையில், அவர் அந்த பிரிவில் கீழ் விளையாட தகுதியற்றவர் என பாரா ஒலிம்பிக் தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிவித்துள்ளது. அதனால் அவருக்கு வழங்கப்பட்ட வெண்கலப்பதக்கம் திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.