'இது எங்க போய் முடியுமோ'... 'கணக்கில் வராத இறந்தவர்கள்'... 'புதிய லிஸ்டை வெளியிட்ட நாடு'... நொறுங்கி போன மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தாக்குதலுக்குக் கணக்கில் வராமல் 3 ஆயிரத்து 800 பேர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் கோரத் தாண்டவம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 31 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 9 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதற்கிடையே கொரோனாவின் கோரப் பிடியில் இங்கிலாந்து சிக்கியுள்ள நிலையில், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 145 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 678 ஆக இருந்தது. இந்த சமயத்தில் சீனா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களின் உண்மைத்தன்மையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இறப்பவர்களின் விவரங்கள் அரசுக்குத் தெரியாமல் இருந்தன. இதனால் பல நாடுகள் வைரசுக்குப் பலியானோர் தொடர்பான தகவல்களை மறு கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கணக்கீட்டின் போது கணக்கில் வராமல் ஏற்கனவே கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று இங்கிலாந்திலும் கணக்கில் வராமல் வைரசுக்கு உயிரிழந்தவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணி நடைபெற்றது.
இதையடுத்து மறு கணக்கீட்டு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டது. அதில் வைரசுக்குக் கணக்கில் வராமல் ஏற்கனவே 3 ஆயிரத்து 811 பேர் உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீட்டின் படி இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய அறிக்கை அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
