‘திருடிய குற்றத்துக்கு கை துண்டிப்பா..?’ இந்திய இளைஞருக்குப் பணியிடத்தில் கிடைத்த தண்டனை..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | May 17, 2019 02:27 PM
பணியிடத்தில் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய இளைஞரின் வலது கையைத் துண்டிக்குமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆலப்புழாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி ரெஸ்டாரன்ட் ஒன்றில் 6 வருடமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சுமார் 1.1 லட்சம் ரியால் காணாமல் போனதும், அதை அந்த இளைஞர் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை அங்கு வேலைக்கு அழைத்து வந்த நண்பர் அந்த பணத்தைத் திருப்பித் தருவதாக உத்தரவாதம் அளித்தும், பணத்தைத் திரட்டிக் கொடுக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில், அந்த இளைஞரின் அறையிலிருந்து திருட்டுப்போன முழுத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரின் குற்றம் சாட்சிகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், சவுதி குற்றவியல் நீதிமன்றம் அந்த இளைஞரின் வலது கையைத் துண்டிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மே 22ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுதியில் சிறிய குற்றங்களுக்கு உடல் பாகங்கள் தண்டிக்கப்படுவதில் தொடங்கி, போதை மருந்து, தீவிரவாதச் செயல்கள், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கு பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்படுவது வரையிலான கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம்.