'ஒரு பக்கம் மாமனார், இன்னொரு பக்கம் மருமகள்'... 'நீச்சல் குளத்தில் மிதந்த சடலங்கள்'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் 3 பேர் இறந்து கிடந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் பாரத் படேல். இவர் தனது குடும்பத்தினரோடு அமெரிக்காவின் நியூசெர்சி நகரில் வசித்து வந்துள்ளார். இவர்கள் கடந்த மாதம் தான் ஐந்து படுக்கையறை கொண்ட வீட்டினை விலைக்கு வாங்கி அங்குக் குடியேறியுள்ளார்கள். வீட்டில் நீச்சல் குளம் இருக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்பட்ட நிலையில், வீட்டின் பின்புறம் புதிதாக ஒரு நீச்சல் குளத்தையும் கட்டினார்கள். அதன் முழு பணியும் சமீபத்தில் தான் முடிந்தது.
இந்நிலையில் நேற்று அந்த வீட்டில் பின்புறத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டது. இதைக் கேட்ட பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், அவசர எண் 911யை அழைத்து பக்கத்து வீட்டில் வழக்கத்துக்கு மாறாகச் சத்தம் கேட்பதாகக் கூறியுள்ளார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைத்த போலீசார், பாரத் படேல் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தில் மாமனார் பாரத் படேல், அவரது 33 வயது மருமகள் நிஷா படேல் மற்றும் அவரது 8 வயது மகள் ஆகியோர் பரிதாபமாக இறந்து கிடந்தார்கள். இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மூன்று பெரும் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. மேலும் 3 பேரும் இறக்கும் போது மற்ற குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேற்கொண்டு விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ள போலீசார், முழுவதுமாக விசாரணை முடிந்த பின்பு தான் எதுவும் கூற முடியும் எனக் கூறியுள்ளார்கள். ஆசையாகக் கட்டிய நீச்சல் குளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
