இந்த 3 விஷயம்... கொரோனா கிட்ட இருந்து 'உங்கள' பாதுகாக்கும்: இந்திய மருத்துவ கவுன்சில்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் மருந்து கண்டறியவில்லை என்பதால் தற்போது தடுப்பு வழிமுறைகளை மட்டுமே நம்ப வேண்டி உள்ளது. இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனாவிடம் நம்மை பாதுகாத்து கொள்ள உதவும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வழிமுறைகளை கொண்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், பரிசோதனை, தொடர்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவையே கொரோனா வைரசிடம் இருந்து உயிர்களை காக்கும் என்று தெரிவித்து உள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கொரோனா அறிகுறிகளை கொண்ட அனைத்து தனிநபர்களுக்கும் பரிசோதனைக்கான வசதி பரவலாக கிடைக்க செய்வது கட்டாயம் ஆகும். கொரோனா பாதிப்பு கட்டுப்படுவதற்கு, தொற்றுடன் தொடர்புடையோரை கண்டறியும் நடைமுறைகளும் வலுப்படுத்தப்பட்டு உள்ளன.
நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவை கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவற்றில், ஆர்.டி.-பி.சி.ஆர்., ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மற்றும் ஆன்டிபாடி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளையும் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.