தமிழகத்தின் காய்கறிச் சந்தைகளில் 'கண்ணாமூச்சி' ஆடும் கொரோனா!?.. 'ஹாட் ஸ்பாட்' உருவாவது எப்படி?.. நெஞ்சை உலுக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 19, 2020 04:23 PM

தமிழகத்தில் அடுத்தடுத்து காய்கறி சந்தைகளில் கொரோனா அதிகம் பரவுவது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

how vegetable markets in tamil nadu are becoming hotspots

தமிழகத்தில் மே 18ம் தேதி உறுதி செய்யப்பட்ட 536 தொற்றுகளில், சென்னையில் 364 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 7,117 பேரில், 1,622 பேர் குணமடைந்துள்ளனர்.  56 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரில், சென்னையில் பாதிக்கப்பட்டோர்  60.5 சதவிகிதம் ஆகும்.

கொரோனாவின் தொடக்க காலங்களில், தமிழகத்தில் டெல்லி சென்று வந்தவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதன் பின், கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, திருவான்மியூர் காய்கறி சந்தையிலும் வியாபாரி ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியவே, அதன்மூலம் 100க்கும் அதிகமானோருக்கு பரவியது.

தற்போது சென்னை எம்ஜிஆர் நகர் காய்கறி சந்தையிலும் வியாபாரிகள் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் சக வியாபாரிகள் சுமார் 150 பேரை தனிமைப்படுத்தி பரிசோதிக்கவும், அவர்களது உறவினர்கள் மற்றும் காய்கறி வாங்க வந்தவர்களை பரிசோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2 வியாபாரிகளுக்கும் கொரோனா எப்படி பரவியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதையடுத்து எம்ஜிஆர் நகர் சந்தை தற்காலிகமாக 3 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து காய்கறி சந்தைகளில் கொரோனா அதிகம் பரவுவது மக்களை அச்சமடையச் செய்துள்ளது. அதனால், கோயம்பேடு, திருவான்மியூர், எம்ஜிஆர் நகர் சந்தை உட்பட, சென்னையில் உள்ள மற்ற காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுவது அவசியமாகியுள்ளது.

இதேபோல், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மற்ற காய்கறி சந்தைகளிலும் தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவது உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கோயம்பேடு, எம்.ஜிஆர்.நகர் காய்கறி சந்தைகளில் இருந்து கொரோனா பரவிய நிலையில், பரவலை தடுக்கும் விதமாக சென்னை பிராட்வே கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதி முழுவதும் இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இயங்காது என வியாபாரிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.