பச்சை நிற ‘ஹல்க்’ நாய்க்குட்டி... உரிமையாளர் 'அதிர்ச்சி'... 'கதிர்வீச்சு' பாதிப்பில்லை என ஆய்வாளர்கள் விளக்கம்...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வளர்ப்பு நாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்றதில் ஒன்று மட்டும் பச்சை நிறத்தில் இருந்ததைக் கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். அந்த குட்டிக்கு ‘ஹல்க்’ என அதன் உரிமையாளர் பெயரிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ஹேவுட் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷனா ஸ்டேமி. இவர் ஜிப்சி எனும் பெயருடைய ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய் சமீபத்தில் 8 குட்டிகளை ஈன்றது.
அவற்றில் 4 வதாக பிறந்த ஒரு ஆண் நாய்க்குட்டி பச்சை நிறத்தில் இருந்ததை கண்டு அதன் உரிமையாளர் ஆச்சரியமடைந்தார். இதையடுத்து அந்த குட்டியை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றினர். இது தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து விளக்கம் அளித்த விலங்கின ஆய்வாளர்கள் நாய்க்குட்டி வயிற்றுக்குள் இருக்கும் போது தாயின் கர்ப்பப் பையிலிருந்த திரவம் அந்த குட்டியை கறை படுத்தியிருக்கலாம் எனக் குறிப்பிட்டனர். ஆனால் அது எந்தவிதமான கதிர்வீச்சிற்கும் உட்படவில்லை’ என்றும் தெரிவித்தனர்.
‘பச்சை நிற குட்டி மற்ற குட்டிகளைப் போல சாதாரணமாகவே உள்ளது. அந்த குட்டிக்கு ‘ஹல்க்’ என பெயரிட்டுள்ளோம்’ என அதன் உரிமையாளர் தெரிவித்தார்.