‘உலக சுகாதார அமைப்பு மேல டவுட்டா இருக்கு.. அதனால!’.. ட்ரம்ப் எடுத்த ‘திடீர்’ முடிவு!... வறுக்கும் உலக நாடுகள்.. அட்வைஸ் பண்ணிய் ஐ.நா!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 15, 2020 06:23 PM

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வரும் நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது மிகவும் வருத்தமளிப்பதாக சீனா உட்பட பல நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

Global condemnation for Trumps WHO funding Cuts over Coronavirus

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, பொருளாதாரமும் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. ஆனால் வைரஸ் பாதிப்பு உண்டான சீனாவை விட, அமெரிக்காவில்தான் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதோடு 28,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துமுள்ளனர்.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக முறையான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை உலக நாடுகளுக்கு அளிக்க, உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாகவும், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், ஆகையால் அது முடியும்வரை அந்த அமைப்புக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்துவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக சுகாதார அமைப்பு மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவை எதிர்கொள்ளும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் சூழ்நிலையில், அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளை பலவீனமடையச் செய்யும் என்றும் இது வருத்தமளிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதுபற்றி பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்த கடினமான நேரத்தில்சிறப்பாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீனாவின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே இந்த நிதியை நிறுத்தி வைப்பதற்கான நேரம் இது அல்ல என்று ஐ.நா பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.