'இறந்து' போன மனைவிக்காக கதறித் துடித்த 'கணவர்'... "அவரு மட்டுமா ஒரு 'நாடே' கலங்கிப் போச்சு..." ஆனா, இறுதியில் தெரிய வந்த திடுக்கிடும் 'உண்மை'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்தன் மனைவி இறந்ததால் கண்ணீர் விட்டு அழுத கணவரைக் கண்டு, ஒரு நாடே உடைந்து போயிருந்த நிலையில், அதன் பிறகு தெரிய வந்த உண்மை, அழுது புலம்பிய மக்களை கோபமடையவும் செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோநாதன் டாவல் (Jonathann Daval) என்பவர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது மனைவி அலெக்சியா (Alexia) கடந்த 2017 ஆம் ஆண்டு ஜாக்கிங் சென்ற போது காணாமல் போனதாக கண்ணீர் மல்க, போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார், ஜோநாதன்.
இதனைத் தொடர்ந்து, அலெக்சியாவைத் தேடிய பிரெஞ்சு போலீசார், சுமார் இரண்டு நாட்களுக்கு பிறகு, மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில் உடலைக் கண்டுபிடித்துள்ளனர். மனைவி இறந்து போனதைக் கண்டு ஜோநாதன் கதறித் துடித்த நிலையில், அவரைத் தொலைக்காட்சியில் கண்டு நாடே கலங்கியது. தனது மனைவியை தனது உயிரை விட நேசித்ததாகவும் ஜோநாதன் கண்ணீருடன் கூறியிருந்தார்.
அலெக்சியாவின் இறுதிச் சடங்கின் போது ஜோநாதனுடன் சேர்ந்து, அவருடைய பகுதியிலுள்ள அனைவரும் நடந்து சென்றனர். ஆனால், போலீசாரின் கண்கள் ஜோநாதனின் கைகளில் இருந்த காயங்களை கவனித்துள்ளது. அது பற்றி, போலீசார் ஜோநாதனிடம் விசாரிக்க, தனது மனைவியுடன் சண்டை நடந்த போது ஏற்பட்ட காயம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஜோநாதன் மீது சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அலெக்சியா காணாமல் போன நாளன்று, வீட்டிற்கு வெளியே எங்கும் செல்லவில்லை என ஜோநாதன் தெரிவித்திருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர், அன்றைய தினத்தில் அவரது கார் வெளியே சென்றதாகவும் கூறியுள்ளனர். அதே போல, அலெக்சியா உடல் கிடைத்த இடத்தில் இருந்த காரின் டயர் தடங்கள், ஜோநாதனின் கார் டயரின் தடத்துடன் ஒத்துப் போவதாக உள்ளது. மேலும், நாளுக்கு நாள் புது புது கதைகளையும் ஜோநாதன் போலீசாரிடம் கூறி வந்துள்ளார்.
இறுதியில், பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின் உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது. ஜோநாதன் மற்றும் அலெக்சியா ஆகியோர், தங்களது பதின்ம வயது முதலே இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதில், ஜோநாதனுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு குறைபாடு இருந்துள்ளது. இதனால், இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், அலெக்சியா, ஜோநாதனுடன் இணைந்து வாழவும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து போவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜோநாதன், அலெக்சியாவின் தலையை சுவற்றில் பலமுறை மோதி, கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, அவரது உடலை மரங்கள் அடர்ந்த பகுதியில் போட்டு எரித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு பொய் காரணங்கள் கூறி தான் கொலை செய்யவில்லை என மறுத்து வந்த ஜோநாதன், தற்போது கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்
