நீங்க வாங்குனா மட்டும் போதும்.. வீட்டை ஃப்ரீயா கொடுத்து 22 லட்சம் பணமும் கொடுக்கும் நிறுவனம்.. ஓஹோ இதுதான் காரணமா?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வீடு ஒன்றினை இலவசமாக விற்பனை செய்ய இருப்பதாகவும் அந்த வீட்டை வாங்குபவருக்கு 22 லட்சம் பணம் தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இலவச வீடு
அமெரிக்காவின் கேன்சாஸ் பகுதியில் உள்ள லிங்கன் ஏரியாவில் அமைத்திருக்கிறது இந்த புராதன வீடு. 1910 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீட்டினை அருகில் உள்ள மருத்துவமனை வாங்கி இருக்கிறது. வீட்டின் உள்ளே ஓக் மற்றும் பைன் மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வசிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கும் இந்த கட்டிடத்தை மருத்துவமனை இடிக்க விரும்பாததால் இதனை விற்க முடிவு செய்திருக்கிறது.
2,023 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டை வாங்குபவர்களுக்கு லிங்கன் கவுண்டி மருத்துவமனை & ஹெல்த்கேர் அறக்கட்டளை 30,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 22.87 லட்ச ரூபாய்) வழங்குவதாக அறிவித்து உள்ளது.
சிக்கல்
இந்த வீடு விற்பனை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தான் இதிலுள்ள சிக்கல் தெரியவந்திருக்கிறது. அந்த அறிக்கையில்," இந்த வீடு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. வீட்டின் உட்கட்டமைப்பை பார்க்கும் போது இந்த வீட்டை இடிக்கும் தேவையில்லை என்பதை உணரலாம். ஆனால், இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், வீட்டின் அஸ்திவாரம் பழுதடைந்து உள்ளது. ஆகவே வீட்டை வேறொரு புதிய அஸ்திவாரத்தில் அமைத்துவிட்டால் இந்த சிக்கல் தீர்ந்துவிடும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில்," வீட்டின் வெளிப்புறப்பகுதி சேதம் அடைந்திருந்தாலும் வீட்டின் உள்ளே மனிதர்கள் வசிக்கலாம். உள்ளே தங்கிக்கொண்டே வெளிப்புற வேலைகளை பார்க்கலாம். இந்த வீட்டில் இருந்து அழகான தெருக்களை பார்வையிட முடியும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இடிப்பு
இந்த வருட இறுதிக்குள் இந்த கட்டிடத்தை யாரும் வாங்க முன்வரவில்லை என்றால், இதனை இடிக்க இருப்பதாகவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புராதான வீட்டை இலவசமாகவும் கொடுத்து, அதனை வாங்குபவர்களுக்கு 22 லட்சம் வரையில் பணமும் கொடுக்கப்படும் என வெளிவந்த இந்த அறிவிப்பு அமெரிக்கா முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
