'என்னோட FINAL OFFER'.. மொத்த டிவிட்டர் நிறுவனத்தையும் வாங்கும் எலான் மஸ்க்?.. ஆத்தாடி இவ்வளவு கோடியா?
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ட்விட்டரை முழுவதுமாக வாங்க திட்டமிட்டு இருக்கிறார். இது உலக தொழில் துறை நிபுணர்கள் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். தற்போது அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார் மஸ்க்.
சுதந்திரம்
ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருந்தாலும் அதன் நிர்வாகக் குழுவில் மஸ்க் இணைய மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் டிவிட்டர் நிறுவன தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் எலான் மஸ்க் "உலகளவில் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டிவிட்டர் இருக்கும் என நம்பிக்கை வைத்துதான் நான் முதலீடு செய்தேன். மேலும் பேச்சு சுதந்திரம் ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமை என நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே டிவிட்டரில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வந்த எலான் மஸ்க் தற்போது அந்த நிறுவனத்தின் பங்குகளை முழுவதுமாக வாங்க இருப்பதாக அறிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விலை என்ன?
ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருக்கிறார். அதன்படி டிவிட்டரை சுமார் 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார். தன்னுடைய கோரிக்கையை ட்விட்டர் நிர்வாகம் ஏற்காத பட்சத்தில் தன்னுடைய பங்குதாரர் நிலையை மாற்ற யோசிக்க வேண்டியிருக்கும் எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார் மஸ்க்.
I made an offer https://t.co/VvreuPMeLu
— Elon Musk (@elonmusk) April 14, 2022
ட்விட்டரை பங்குச் சந்தையில் இருந்து வெளியேற்றி முழுமையான தனியார் நிறுவனமாக மாற்றி அமைப்பதன் மூலம் பல்வேறு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் மஸ்க். பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை மொத்தமாக எலான் மஸ்க் வாங்குவதாக அறிவித்திருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.