அத ‘கம்பேர்’ பண்ணா இதெல்லாம் ஒன்னுமேயில்ல.. 20 வருஷத்துக்கு முன் அமெரிக்க தேர்தலில் ‘ஆட்டம்’ காட்டிய ஜார்ஜ் புஷ்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் நடந்தது போலவே இந்த முறை நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்காக கடந்த 2000ம் ஆண்டு குடியரசு கட்சி சார்பில் ஜார்ஜ் புஷ் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் அல் கோர் போட்டியிட்டனர். அந்த தேர்தல் பரபரப்பான தேர்தலாக வரலாற்றில் இடம்பெறப்போகிறது என தேர்தல் நாள் வரை யாரும் கணிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை நாளன்று முக்கிய மாகாணமான ஃபுளோரிடாவில் அல் கோர் வெற்றி பெற்றதாக CNN, Foxs உள்ளிட்ட ஊடகங்கள் அறிவித்தன.
ஃபுளோரிடாவில் வெற்றி பெற்றால் அதிபர் ஆனதுபோல கருதப்படும். அதனால் அல் கோரே அதிபர் என்று மக்கள் முடிவுக்கு வந்தார்கள். ஆனால் சில மணிநேரங்களில் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜ் புஷ் முந்துவதாக முடிவுகள் வெளியாகத் தொடங்கின. வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. இதனை அடுத்து ஜார்ஜ் புஷ்ஷே அதிபர் என ஊடகங்கள் கூறத் தொடங்கின. அல் கோரியும் தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் அதன்பிறகுதான் அதிரடி திருப்பம் தொடங்கியது.
ஃபுளோரிடா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளின் முடிவுகள் வெளியானபோது, இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான வித்தியாசம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அல் கோரை விட ஜார்ஜ் புஷ் 200 வாக்குகளே அதிகமாக இருந்தார். இதனால் தோல்வியை ஒப்புக்கொண்ட அல் கோர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தை நாடினார். இரண்டு வாரங்களுக்கு பிறகு 537 வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜ் புஷ் வென்றதாக ஃபுளோரிடா தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அல் கோர் ஏற்கவில்லை.
இதனை எதிர்த்து ஃபுளோரிடா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில் ஜார்ஜ் புஷ் உச்சநீதிமன்றத்தை நாடினார். அமெரிக்க தேர்தல் நடைமுறைப்படி டிசம்பர் மாதம் 12ம் தேதிக்குள் ஒவ்வொரு மாகாணமும் தேர்தல் முடிவை அறிவித்தாக வேண்டும்.
கடைசி சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கையை உச்சநீதிமன்றம் நிறுத்தியது. இதனால் வேறு வழியில்லாமல் அல் கோர் தோல்வியை ஒப்புக்கொண்டார். அந்த தேர்தலில் ஜார்ஜ் புஷ் 271 தொகுதிகளையும், அல் கோர் 266 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்த தேர்தலிலும் ஜார்ஜ் புஷ் வென்று 8 ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்தார்.
20 வருடங்களுக்கு பிறகு தற்போது நடந்த அமெரிக்க தேர்தலில் இதேபோல் நடைபெற்று வருகிறது. இதுவரை ஜோ பைடன் 264 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறார். டிரம்ப் 214 தொகுதிகளில் வெற்றி பெற்று பின்னடை சந்தித்துள்ளார். இதனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறிய டிரம்ப், நீதிமன்றத்தில் முறையிட போவதாக தெரிவித்திருந்தார்.