'216 பண்ணைகள்... பலியாகப் போகும் 1.7 கோடி மிங்க்குகள்!'.. மிக வீரியமான 'புதிய' கொரோனா வைரஸ்... பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்த டென்மார்க் அரசு பண்ணைகளில் வளரும் 17 மில்லியனுக்கும் அதிகமான மிங்க் (minks) எனப்படும் கொறி வகை விலங்குகளைக் கொல்ல முடிவெடுத்துள்ளது.

மிங்க் விலங்குகளின் ரோமங்கள் விலை உயர்ந்தவை. மிங்க் ரோமங்களிலிருந்து தயாரிக்கப்படும் பேஷன் பொருள்களுக்கு மதிப்பு அதிகம். மிங்க்குகளிடமிருந்து பெறப்படும் ரோம வர்த்தகத்தில் டென்மார்க் உலகளவில் முக்கிய இடம் வகிக்கிறது.
டென்மார்க்கில் 1,139 பண்ணைகளில் சுமார் 17 மில்லியன் மிங்க்குகள் வளர்க்கப்படுகின்றன.
டென்மார்க் பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்க்குகள் பல கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. டென்மார்க் அரசின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 216 மிங்க் பண்ணைகளில் கோவிட் -19 நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிலும், மிங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவிய மரபுணு மாற்றமடைந்த, அதிக வீரியமுள்ள கொரோனா வைரஸ் 214 பேரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடமிருந்து மிங்க்குகளுக்குப் பரவும் கொரோனா வைரஸ் அந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றும்போது மரபணுவில் மாற்றமடைந்து இன்னும் ஆபத்தாக உருமாறிவிடுகிறது.
அப்படி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் எதிர்கால தடுப்பூசியின் செயல்திறனை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால் டென்மார்க் பண்ணைகளில் உள்ள மிங்க்குகள் கொல்லப்படவுள்ளன.
மேலும், மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவுவதால் டென்மார்க்கின் வடக்கு பகுதியில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.
இதுகுறித்து டென்மார்க பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen), "பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்க்குகள் சுகாதார அபாயமாக உருவெடுத்துள்ளன. மிங்க்குகளை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மிங்க்குகளை அழிக்க ராணுவம் மற்றும் போலீஸ் களமிறக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
டென்மார்க் நாட்டில் அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ள 17 மில்லியன் மிங்குகளின் மதிப்பு சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, டேனிஷ் மிங்க் வளர்ப்பாளர்களுக்கான தொழில் சங்கம், "டென்மார்க்கில் இதுவொரு கருப்பு நாள்" என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் லட்சக்கணக்கான மிங்க்குகள் கொல்லப்பட்டன. அமெரிக்காவிலும் சுமார் 10,000 க்கும் அதிகமான மிங்குகள் கொரோனா நோய் பாதிப்பால் இறந்தன.
இந்த நிலையில் தான் டென்மார்க் அரசு சுமார் 17 மில்லியன் மிங்க்குகளைக் கொல்ல திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, டென்மார்க்கில் மிங்க் வளர்ப்பையே முற்றுப்பெறச் செய்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

மற்ற செய்திகள்
